சென்னை:முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை ஒட்டி கின்னஸ் சாதனை ஓட்டம் - கலைஞர் நினைவு பன்னாட்டு மாரத்தான் ஆகஸ்ட் 6-ஆம் தேதி நடைபெறுகிறது. மாரத்தானில் கலந்து கொள்வோருக்கான முன்பதிவு துவக்க நிகழ்ச்சி சென்னை காமராஜர் சாலையில் உள்ள மாநில கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு, அமைச்சர் காந்தி, மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், மேற்கு மாவட்ட பொறுப்பாளர் சிற்றரசு மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்த மாரத்தானில் மற்றவர்களுக்கு நுழைவு கட்டணம் 500 ரூபாயாகவும், திருநங்கைகளுக்கு நுழைவு கட்டணம் 100 ரூபாயும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து நிகழ்ச்சி மேடையில் பேசிய மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், "கருணாநிதி நினைவு பன்னாட்டு மாரத்தான் போட்டிக்கான முன்பதிவை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைத்திருக்கிறார். தயாநிதி மாறனிடம் வருத்தத்தை தெரிவிக்கிறேன். அவர் பெயரை பேனரில் போடவில்லை, இந்த நிகழ்ச்சியை இந்த கல்லூரியில் நடத்த காரணம், இந்த மாநில கல்லூரி, முதல்வர் ஸ்டாலின் பயின்ற கல்லூரி.
நான் சாதனை படைக்க வேண்டும் என்று ஓடவில்லை. என் சர்க்கரை நோயை குறைக்கவே மாரத்தானில் ஓடுகிறேன். இன்றைக்கு 139 மாரத்தான்களில் ஓடியிருக்கிறேன். இந்தியாவின் 36 மாநிலங்களிலும் ஓட வேண்டும் என்பது இலக்காக வைத்துள்ளேன். 140 வது மாரத்தான் நாளை ஊட்டியில் ஓட இருக்கிறேன். 1,611 பேர் இதுவரை மாரத்தானில் பங்கேற்க பெயர் கொடுக்க முன் வந்துள்ளார்கள். மேலும் திருநங்கைகளுக்கான 100 ரூபாய் கட்டணத்தையும் சென்னை தெற்கு மாவட்ட திமுகவே பொறுப்பேற்கும்" என தெரிவித்தார்.
தொடர்ந்து மேடையில் பேசிய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு 63 வயது என்றால் நம்ப முடிகிறதா. எல்லாருக்கும் இன்ஸ்பிரேஷன் அவர். இந்த முறை பதிவு நிகழ்ச்சியையே இவ்வளவு பெரிய நிகழ்ச்சியாக நடத்தி இருக்கிறீர்கள். விளையாட்டு துறை அமைச்சராக இங்கு வந்தது பெருமை கொள்கிறேன்.
மா.சுப்பிரமணியன் என்றால் அமைச்சர், மாவட்ட செயலாளரை தாண்டி ஒரு மாரத்தான் வீரர். உலகத்தில் ஃபிட்டான அமைச்சர் என்றால் முதலமைச்சருக்கு அடுத்து அமைச்சர் மா. சுப்பிரமணியன் தான். உள்ளூரில் மட்டுமின்றி உலக அளவிலும் மாரத்தானில் ஓடுகிறார்.
இவரை பார்க்கும் போது, எனக்கு பொறாமையாக இருக்கிறது. எப்படிடா இப்படி ஃபிட்டாக இருக்கிறார். மாவட்ட நிகழ்ச்சியையும் நடத்துகிறார். அதிலும் சேகர் பாபு, சிற்றரசு, மா. சுப்பிரமணியனுக்கு இடையே ஆரோக்கியமான போட்டி இருக்கிறது.