சென்னை: சட்டப்பேரவை கூட்டத்தொடரின் இரண்டாவது நாளான இன்று (அக்.10) பேரவை கூட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமை தொகை தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இதற்கு பதிலளித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “தமிழகத்தில் உள்ள மகளிர் அனைவருக்கும் கலைஞர் உரிமைத் தொகை திட்டம் அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15-ஆம் தேதி காஞ்சிபுரத்தில் தொடங்கி வைக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து ஒரு கோடியே 6 இலட்சத்து 52 ஆயிரத்து 198 மகளிர்களின் வங்கி கணக்கில் உரிமை தொகையானது செலுத்தப்பட்டது. இந்தத் திட்டத்தை இந்தியாவில் உள்ள பல மாநிலங்கள் பின்பற்றி வருகின்றனர். இந்தத் திட்டத்தை செயல்படுத்தியது மிகப்பெரிய ப்ராசஸ்.
இன்னும் சொல்லப்போனால் இந்த திட்டம் புதிதும் கூட, ஏனென்றால் ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று விண்ணப்பங்களை வழங்கியதில் ஆரம்பித்து, மகளிர் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து விண்ணப்பிக்க முகாம்களுக்கு வரவழைத்து அவர்களின் விண்ணப்பங்களை ஆன்லைனில் பதிவு செய்தோம். மேலும் இந்த திட்டத்தில் மக்களிடம் இருந்து ஒரு கோடியே 62 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
அந்த விண்ணப்பங்கள் அடிப்படையில் கள ஆய்வுகள் செய்யப்பட்டு அதன் பிறகு வெளிப்படைத் தன்மையுடன் யாருடைய தலையிடும் இல்லாமல், குறுக்கிடும் இல்லாமல் தகுதி வாய்ந்த ஒரு கோடியே 6 இலட்சத்து 52 ஆயிரத்து 198 மகளிர் தேர்வு செய்யப்பட்டு, அவர்களது வங்கி கணக்கில் ரூபாய் 1000 செலுத்தப்பட்டது.