அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி சென்னை: கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் கடந்த 2018ம் ஆண்டு முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நடப்பு ஆண்டுக்கான கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் ஜனவரி 19 முதல் தொடங்கி 31 தேதி வரை தமிழ்நாட்டில் நடைபெறவுள்ளது.
இதையடுத்து தமிழகத்தில் நடைபெறவுள்ள கேலோ இந்தியா போட்டியின் தொடக்க விழாவில், பங்கேற்க வருமாறு பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்க அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று(ஜன.4) டெல்லி சென்றார். இந்நிலையில் இன்று மோடியைச் சந்தித்து உதயநிதி ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.
பின்னர், சென்னை திரும்பிய உதயநிதி ஸ்டாலின் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது பேசிய விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “சென்னையில் உள்ள ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் வரும் 19 ஆம் தேதி அன்று நடைபெற உள்ள கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டியின் தொடக்க விழாவிற்குப் பிரதமர் நரேந்திர மோடியை அழைத்து விட்டு வருகிறேன்.
கோரிக்கையை நிறைவேற்றுவதாக பதிலளித்த மோடி: அதேபோல சென்னை மற்றும் தூத்துக்குடி ,நெல்லை மாவட்டத்தில் வெள்ளத்தால் பெரிய பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. ஏற்கனவே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரண தொகை வேண்டும் என நீங்கள் திருச்சிக்கு வரும் பொழுது கோரிக்கை வைத்திருந்தார். அதை நிறைவேற்றிக் கொடுங்கள் என முதலமைச்சர் ஞாபகப்படுத்தச் சொன்னார் என்று சொன்னேன். கண்டிப்பா நிறைவேற்றித் தருகிறேன் என்று சொன்னார்.
மரியாதை நிமித்தமாக, நான் ராகுல் காந்தியைப் பார்க்க வேண்டும் என்று அனுமதி கேட்டேன். அதற்கு அவரும் வரச் சொன்னார் நானும் சென்றேன். நாங்கள் பத்து நிமிடம் கலந்துரையாடினோம். அவரிடம் நான், உங்களுடைய மணிப்பூர் பாதை யாத்திரை வெற்றியடைய நான் வாழ்த்துகள் எனத் தெரிவித்தேன். மேலும், தூத்துக்குடி நெல்லை மாவட்டங்களில் வெள்ள நிலவரங்களை குறித்து என்னிடம் கேட்டறிந்தார் எனக் கூறினார்.
இதையும் படிங்க:'மூடப்பட்ட ஸ்டெர்லைட் அப்படியே இருக்கட்டும்' - ராமதாஸ் அறிக்கை..!