சென்னை:சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் கூட்டம் துணைவேந்தர் வேல்ராஜ் தலைமையில் இன்று (ஏப்ரல் 20) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் உயர் கல்வித்துறைச் செயலாளர் கார்த்திகேயன், தொழில்நுட்ப கல்வி இயக்குநர் லலிதா உள்ளிட்ட சிண்டிகேட் குழுவின் உறுப்பினர்கள் பங்கேற்றனர். இந்த சிண்டிகேட் குழுவின் கூட்டத்தில், பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அவற்றில், சிண்டிகேட் உறுப்பினர்கள் மாற்றத்திற்கான ஒப்புதலும் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 2021ஆம் ஆண்டு அண்ணா பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் உறுப்பினராக உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் இளைஞர் நலன் மற்றும் சிறப்பு செயலாக்கத் திட்டத் துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றதை அடுத்து, அண்ணா பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினர் பதவியில் இருந்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ராஜினாமா செய்தார். ஏனென்றால், சட்டமன்ற உறுப்பினராக இருந்தால் மட்டுமே சிண்டிகேட் உறுப்பினராக முடியும். இதற்கு குழுவின் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
சிண்டிகேட் உறுப்பினராக பொறுப்பேற்றது முதல், அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற சிண்டிகேட் கூட்டங்களில் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றதில்லை என்பது கூடுதல் தகவல். மேலும், ஆளுநர் தரப்பில் நியமிக்கப்பட்ட ரஞ்சினி பார்த்தசாரதி ஓய்வுபெற்றதால், அவருக்கு பதில் வேறு ஒருவரை நியமிக்கவும் ஆளுநர் மாளிகைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. பதவி வழி உறுப்பினரான தகவல் தொழில்நுட்பத்துறை செயலாளர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதால், அவருக்குப் பதிலாக புதியதாக நியமனம் செய்யப்பட்டுள்ள செயலாளர் பதவியை ஏற்றுக் கொண்டார்.
சிண்டிகேட் உறுப்பினராக தொழிற்சாலை சார்பாக சேகோ.சொக்கலிங்கம் நியமிக்கப்பட்டுள்ளார். சட்டப்பேரவைக் கூட்டம் இன்று முடிய உள்ள நிலையில், புதிய உறுப்பினர் தேர்வு செய்யப்பட்டு, அண்ணா பல்கலைக்கழகத்திற்கு அனுப்பி வைக்கப்படுவர். அதனைத் தொடர்ந்து சிண்டிகேட் உறுப்பினராக அரசு சார்பில் புதிய சட்டமன்ற உறுப்பினர் பதவி ஏற்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:நிதி நிறுவனங்களில் முதலீடு செய்யும்போது கவனமுடன் இருக்க வேண்டும்: முதலமைச்சர் அட்வைஸ்!