சென்னை: இந்திய மோட்டார் ஸ்போர்ட்ஸ் வரலாற்றில் சிறப்பு நிகழ்வாக, பெருநகர சென்னை மாநகராட்சி (GCC), சென்னை பெருநகர வளர்ச்சி ஆணையம் (CMDA), தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (SDAT), ரேஸிங் புரோமோஷன்ஸ் பிரவைட் லிமிடெட் ஆகியவற்றின் சார்பில், "சென்னை ஃபார்முலா ரேசிங் சர்க்யூட்" (chennai formula racing circuit) என்ற பெயரில் டிசம்பர் 9,10 ஆகிய தேதிகளில் நடத்தப்படவுள்ளது.
இந்தியாவில் முதல் முறையாகச் சாலைகளில் நடத்தப்படுகின்ற மிகப்பெரிய மோட்டார் ரேஸ் இதுவே ஆகும். சென்னை ஃபார்முலா ரேசிங் சர்க்யூட் - F4 போட்டியானது, சென்னை மாநகரில் உள்ள தீவுத்திடல் மைதானத்திலிருந்து 3.5 கி.மீ சுற்றளவில் இரவுப் போட்டியாக (Street Circuit) நடத்தப்படுகிறது.
இந்தச் சிறப்புமிக்க போட்டியில் இந்தியா மற்றும் வெளிநாடுகளிலிருந்து ஓட்டுநர்கள் பங்கேற்க உள்ளனர். இந்தப் போட்டிக்கான அறிமுகக் கூட்டம், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் கடந்த ஆகஸ்ட் 16ஆம் தேதி நடத்தப்பட்டது.
அப்போது தமிழக அரசு சார்பில், இந்தப் போட்டியினை நடத்துவதற்காக 40 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதில் முதற்கட்ட தொகையாக 15 கோடி ரூபாயை, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் போட்டி அமைப்பாளர்களிடம் வழங்கினார்.