இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்திய மாநிலங்கள் அனைத்தோடும் ஒப்பிடுகையில் தமிழ்நாடு ஆளுமைத் திறனில் முதலிடம் பெற்று விளங்குவதாக மத்திய அரசு நடத்தியிருக்கும் ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன.
இதனைக்கண்டு பொறாமைத் தீயில் வெந்துகொண்டிருக்கும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், 'முதலமைச்சர் மீதும், அதிமுக அரசு மீதும் கொண்டிருக்கும் காழ்ப்புணர்ச்சியினால் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு அதிமுக உடைந்துவிடும் அதிமுக அரசு முடிந்துவிடும்' என்றார்.
தமிழ்நாட்டின் முதலமைச்சர் பதவியில் அமர்ந்துகொண்டு தங்கள் குடும்பத்தின் அராஜக ஆட்சியை தமிழ்நாட்டில் நிலைநாட்டிக் கொள்ளலாம் என்று கனவுக்கோட்டை கட்டியிருந்தவர் மு.க. ஸ்டாலின், ஆனால் ஜெயலலிதா மறைவிற்கு பிறகும் அதிமுக அசைக்க முடியாக இரும்புக் கோட்டையாகத் திகழ்கிறது.
சட்ட ஒழுங்கிலும், மக்களுக்கு பல்வேறு சேவைகளை வழங்குவதிலும் தமிழ்நாடு முதலிடத்தில் இருப்பதாக மத்திய அரசு வெளியிட்டிருக்கும் ஆய்வு முடிவுக்கு, எதிர்க்கட்சித் தலைவராக உள்ள மு.க. ஸ்டாலின் தமிழ்நாடு அரசை பாராட்டியிருக்க வேண்டாமா? அதைவிடுத்து மத்திய அரசின் ஆய்வின் முடிவையே கேலிக்கூத்தாக்கியிருக்கிறார்.
என்.ஆர்.சி. நடைமுறைப்படுத்தப்படாது என மத்திய உள் துறை அமைச்சகம் தெரிவித்திருப்பதை மு.க. ஸ்டாலின் அறிவாரா? எது நடந்தாலும், அதில் அரசியல் ஆதாயம் தேட என்ன வழி என்ற சுயநல தீய சிந்தனையிலிருந்து விடுபட்டால்தான் பொதுவாழ்வில் இருப்பவர்கள் தலைவர்களாக முடியும்.
அரசின் அறிக்கைகளை படிப்பதில்லை, நடுநிலையான புள்ளிவிவரங்கள், கடந்த கால நிகழ்வுகளை நினைவில் கொள்வதில்லை. எதையும் ஒரு பொறுப்பற்ற பார்வையோடு அணுகும் மனநிலையில் எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் இருப்பது கண்டிக்கத்தக்கது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:'ஸ்டாலின் போராடுவது உதயநிதியை முன்னிலைப்படுத்துவதற்காகவே' - ஆர்.பி. உதயகுமார் குற்றச்சாட்டு!