சென்னை, திரு.வி.க நகர் மண்டலத்திற்கு உட்பட்ட பகுதியான புளியந்தோப்பில் நடைபெற்று வரும் கரோனா தடுப்புப் பணிகள் குறித்து, வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இன்று (ஆக. 24) ஆய்வு மேற்கொண்டார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் உதயகுமார், 'தென்மேற்குப் பருவமழை, இந்த ஆண்டு ஜூன் மாதம் தொடங்கி, தொடர்ந்து பெய்து வருகிறது. இந்த ஆண்டு தென்மேற்குப் பருவ மழையானது சராசரியைவிட 28 விழுக்காடு அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு நீர்த்தேக்க அணைகளின் கொள்ளளவு அதிகரித்துள்ளது.
கரோனாவால் பாதிக்கப்பட்டு, பிற நோய்களுடனும் இருப்பவர்கள்தான் பெரும்பாலும் உயிரிழப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தன்னார்வலர்களைக் கொண்டு, பொது இடங்களில் முகக்கவசங்கள் அணிவது, சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது போன்றவை குறித்து பொது மக்களிடையே வலியுறுத்தி, பரப்புரை வாகனங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.