சென்னை:சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் 4வது மாநில மாநாடு மற்றும் 20வது ஆண்டு விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று (நவ. 26) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.
அதைத் தொடர்ந்து, கலைஞர் நூற்றாண்டை முன்னிட்டு நடத்தப்பட்ட கட்டுரை, கவிதை, குறும்பட போட்டிகளில் வென்ற மருத்துவர்களுக்கு பரிசுகளும், சிறந்த மருத்துவர்கள் மற்றும் இளம் மருத்துவர்களுக்கு விருதுகளையும் வழங்கினார். பின்னர், நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது, "நீட் விலக்கு நம் இலக்கு என்னும் 'கையெழுத்து இயக்கத்தில்' இன்று வரை 39 லட்சம் கையெழுத்து பெறப்பட்டுள்ளது.
நீட்க்கு பின் நெக்ஸ்ட் தேர்வு வருகிறது. யாரும் மருத்துவம் படிக்கக் கூடாது என்பதற்காக பாஸிஸ்ட்கள் கொண்டு வரும் தேர்வுகளே நீட், நெக்ஸ்ட் தேர்வுகள். தமிழ்நாடு சுகாதாரக் குறியீடுகளில் முதன்மையாகத் திகழ மருத்துவர்களே காரணம். 1925-க்கு முன்னர் இருந்த நிலைக்கு மருத்துவ துறையை கொண்டு செல்ல மத்திய அரசு துடிக்கிறது.
1925 ஆம் ஆண்டுக்கு முன்னர் மருத்துவம் படிக்க சமஸ்கிருதம் தெரிய வேண்டும். மருத்துவத்திற்குள்ளும் பாசிஸ்ட்கள் தங்கள் கொள்கையைத் திணிக்க முயற்சித்து வருகின்றனர்" என்று தெரிவித்தார். தொடர்ந்து, நிகழ்ச்சியில் பேசிய மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், "நீட் விலக்கிற்கு அரசு சார்பில் பல பணிகள் நடந்து வருகிறது.
அதில் சட்டப்போராட்டமும் நடத்தப்பட்டும் வருகிறது. நீட் எதிர் மனநிலை இன்று மேலோங்கி வர உதயநிதியே காரணம். இந்த ஆண்டு கலந்தாய்விற்கு பின்னர் தமிழ்நாட்டில் காலியாக இருந்த 86-இளநிலை மருத்துவப் படிப்பு இடங்களும், 114 முதுகலை மருத்துவ இடங்களும் நிரப்பபட்டுள்ளது.
இது தமிழ்நாடு அரசின் முயற்சிக்கு கிடைத்த வெற்றியாகும். இன்று வெளிப்படையாக மருத்துவர் மற்றும் செவிலியர்களின் பணியிட மாறுதல்கள் நடைபெற்று வருகின்றன. மேலும் தற்போது கூடுதலாக, 5 ஆயிரம் மருத்துவத்துறை காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ளது" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க:"நீட் தேர்வை போன்றே நெக்ஸ்ட் தேர்வையும் வீறு கொண்டு எதிர்க்க வேண்டும்" - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்!