சென்னை:போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தலைமையில், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர் பாபு முன்னிலையில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இன்று (ஜன.10) சென்னை மாநகர் போக்குவரத்துக் கழக தலைமையகத்தில், மகளிர் மற்றும் குழந்தைகள் நலன் மற்றும் பாதுகாப்பினை உறுதி செய்கின்ற திட்டத்தின் கீழ், 2,330 பேருந்துகள் மற்றும் பணிமனைகள், பேருந்து நிலையங்கள் என 63 இடங்களில் பொருத்தப்பட்ட CCTV கண்காணிப்பு கேமராக்களுக்கான ரூ.4.72 கோடி மதிப்பீட்டிலான ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுபாட்டு (Integrated Command & Control Centre) மையத்தை இரண்டாம் கட்டமாக தொடங்கி வைத்தார்.
2,330 பேருந்துகள்:மகளிர் மற்றும் குழந்தைகள் நலன் மற்றும் பாதுகாப்பில் அக்கறை கொண்ட ஒன்றிய மற்றும் தமிழ்நாடு அரசு, நிர்பயா திட்டத்தின் (Nirbhaya Fund) கீழ் சென்னை மாநகர் பேருந்துகளில் பயணிக்கும் மகளிர் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பை உறுதி செய்யும் வண்ணம் சுமார் ரூ.72.25 கோடி மதிப்பீட்டில் 2,500 பேருந்துகள் மற்றும் பணிமனைகள், பேருந்து நிலையங்கள் என மொத்தமாக 66 இடங்களில் கேமராக்கள் பொருத்தும் பணி நடைபெற்று, தற்போது 2,330 பேருந்துகள் மற்றும் பணிமனைகள், பேருந்து நிலையங்கள் என மொத்தமாக 63 இடங்களில் இத்திட்டமானது தொடக்கி வைக்கப்பட்டுள்ளது.
பேருந்துகளில் சிசிடிவி:கடந்த 14.05.2022அன்று தமிழ்நாடு முதலமைச்சர், 500 பேருந்துகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, இத்திட்டமானது பரிட்சார்த்த முறையில் (Beta Version) முதற்கட்டமாக ஆரம்பிக்கப்பட்டது. மகளிர் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பினை அச்சுறுத்தும் வகையில் இதுநாள் வரையில் பேருந்துகளிலிருந்து எவ்வித அழைப்பும் பெறப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, இரண்டாம் கட்டமாக கூடுதலாக 1,830 பேருந்துகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, மொத்தமாக 2,330 பேருந்துகளில் இத்திட்டமானது செயல்படுத்தப்பட்டுள்ளது.
மாநகர் போக்குவரத்துக் கழகத்தைச் சார்ந்த 2,330 பேருந்துகளில், ஒவ்வொரு பேருந்திற்கும் ஒரு மொபைல் நெட்வொர்க் வீடியோ ரெக்கார்டர் (MNVR), 3 கண்காணிப்பு கேமராக்கள், 4 அவசர கால பொத்தான்கள் (Panic Button) மற்றும் ஒரு ஒலிபெருக்கியும் ஆக மொத்தம் 2,330 மொபைல் நெட்வொர்க் வீடியோ ரெக்கார்டர் (MNVR), 6,990 கண்காணிப்பு கேமராக்கள், 9,320 அவசரகால பொத்தான்கள் (Panic Button) மற்றும் 2,330 ஒலிபெருக்கிகள் ஆகியவை பொருத்தப்பட்டுள்ளன.