தமிழ்நாடு

tamil nadu

மாமல்லபுரத்தில் சர்வதேச அலைச்சறுக்குப் போட்டி - அமைச்சர் உதயநிதி அறிவிப்பு!

By

Published : Apr 18, 2023, 4:39 PM IST

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் வரும் ஆகஸ்ட் 14ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை, சர்வதேச அலைச்சறுக்குப் போட்டி நடைபெறவுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

Minister
அலைச்சறுக்கு

சென்னை: தமிழ்நாட்டில் சர்வதேச சர்ஃபிங் போட்டி நடத்துவது தொடர்பான செய்தியாளர் சந்திப்பு, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் இன்று(ஏப்.18) நடைபெற்றது. இதில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தமிழ்நாடு மற்றும் இந்திய சர்ஃபிங் சங்கத் தலைவர் அருண் வாசு, விளையாட்டுத்துறை செயலாளர் அதுல்யா மிஸ்ரா, எஸ்டிஏடி உறுப்பினர் செயலாளர் மேகநாத ரெட்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

முதலில் பேசிய இந்திய சர்ஃபிங் சங்கத் தலைவர் அருண் வாசு, "தமிழகத்தில் கோவளத்தில் பத்து ஆண்டுகளுக்கு முன்பு சிறிதாக ஆரம்பித்த இந்த சர்ஃபிங் தற்போது உலக வரைபடத்தில் தமிழகத்தையும் இந்தியாவையும் இடம் பிடிக்க செய்துள்ளது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் நம்பிக்கைக்குரிய இளம் குழந்தைகளுக்கு பயிற்சி அளிப்பதன் மூலம் உலக சர்ஃபிங்கில் இந்தியா பெரும் சக்தியாக இருக்கும்.

இந்த சர்வதேச சர்ஃப் லீக் போட்டியில் 12 முதல் 13 நாடுகளில் இருந்து கிட்டத்தட்ட 100 சர்வதேச சர்ஃபர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் நடைபெற உள்ளதால் ஆண்கள் பிரிவில் 10 வீரர்கள் வைல்ட் கார்டு முறையிலும், பெண்கள் பிரிவில் 5 வீராங்கனைகள் வைல்ட் கார்டு முறையிலும் இப்போட்டியில் பங்கேற்க உள்ளனர்.

உலக சர்ஃபிங் விளையாட்டுப் போட்டியில் கலந்து கொள்வதற்காக, வரும் மே மாதம் நான்கு பேர் கொண்ட குழு மூலம் சிறப்பாக பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதில் மூன்று வீரர்கள் தமிழ்நாட்டைச் சார்ந்தவர்கள் என்பது பெருமைக்குரிய விஷயம்.

தமிழகத்தில் சுமார் 16 சர்ஃபிங் பயிற்சி பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. பயிற்சி செய்வதற்கு நேர்த்தியான கடல் பகுதி தேவை. தற்போது கன்னியாகுமரி ராமேஸ்வரம் உள்ளிட்ட கடற்பகுதிகளில் இந்த பயிற்சி செய்வதற்கான இடம் உள்ளதா? என்று ஆராய்ந்து வருகிறோம். பெண்களை இந்த விளையாட்டில் வருவதற்கு அனைத்து வகையான ஊக்கத்தையும் நாங்கள் அளித்து வருகிறோம்" எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "தமிழ்நாடு அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை மற்றும் தமிழ்நாடு அலைச்சறுக்கு அசோசியேஷன், இந்திய அலைச்சறுக்குப் ஃபெடரேஷன் இணைந்து, இந்தியாவில் முதன்முறையாக, சர்வதேச அலைசறுக்குப் போட்டியை நடத்தவுள்ளது.

இந்த பெருமைக்குரிய போட்டி, வரலாற்றுச் சிறப்புமிக்க மாமல்லபுரத்தில் வரும் ஆகஸ்ட் 14ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்தியாவில் விளையாட்டு வளர்ச்சியில் தொடர்ந்து தமிழ்நாடு முன்னணியில் உள்ளது, பல துறைகளில் வளமான பாரம்பரியத்தை வளர்த்து வருகிறது. நமது மாநிலம் ஹாக்கி, கபடி, கிரிக்கெட், டென்னிஸ், ஸ்குவாஷ், கைப்பந்து, வாள்வீச்சு, சதுரங்கம் போன்றவற்றில் சிறப்பான திறமைகளை வெளிப்படுத்தி, தேசிய மற்றும் சர்வதேச அரங்கில் தனித்துவத்தை உறுதிப்படுத்தி வருகிறது.

சமீப காலங்களில், அலைச்சறுக்கு விளையாட்டு ஊக்குவிப்பை தமிழ்நாடு முன்னின்று நடத்தி வருகிறது. இப்போட்டியை நடத்துவதற்கு தமிழ்நாடு அரசு சார்பில் 2 கோடியே 67 லட்சம் நிதி வழங்கப்படுகிறது. இந்த சர்வதேச சர்ஃபிங் விளையாட்டுப் போட்டியில் 100 சர்வதேச வீரர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தமிழக அரசின் அடுத்த மைல்கல் ஆகும். சர்வதேச போட்டிகள் நடத்துவது குறித்து கபடி, கால்பந்து சங்கத்தின் நிர்வாகிகளிடமும் பேசி வருகிறோம், விரைவில் அதுவும் நடைபெறும்" என்று தெரிவித்தார்.

முன்னதாக இப்போட்டியை நடத்துவதற்கான காசோலையை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இந்திய சர்ஃபிங் சங்கத் தலைவர் அருண் வாசுவிடம் வழங்கினார்.

இதையும் படிங்க: "போராளி இளையபெருமாளுக்கு சிதம்பரத்தில் நூற்றாண்டு நினைவரங்கம்" - முதலமைச்சர் அறிவிப்பு!

ABOUT THE AUTHOR

...view details