அமைச்சர் உதயநிதி சினிமாவில் கதாநாயகனாக நடித்தாலும் அரசியலில் காமெடியன் தான் - டிடிவி தினகரன் சென்னை: அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் 6வது ஆண்டு துவக்க விழா சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தலைமையில் நடைபெற்றது. பின்பு செய்தியாளர்களின் சந்தித்த டிடிவி தினகரன், "ஆர்கே நகர் வெற்றியைத் தவிர நாங்கள் வேறு எந்த தேர்தலிலும் வெற்றியும் பெறவில்லை.
2017 என்னுடன் வந்த தொண்டர்கள் ஜெயலலிதாவுடன் இருந்த தொண்டர்கள், பல கட்சியில் இருந்து என்னை நம்பி வந்த தொண்டர்கள், இளம் பெண்கள் இவர்கள் எல்லாம் அப்படியே எங்களுடன் இருக்கிறார்கள். அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் தான் உண்மையான அதிமுக இயக்கம் என்று எங்களுடன் இருக்கிறார்கள்.
ஜனநாயக ரீதியாக அதிமுகவை மீட்டெடுப்பது என்ற சரியான முறையை நாங்கள் கடைபிடிக்கிறோம். இன்னும் சிலர் ஜெயலலிதாவுடன் இருந்தவர் புதிய கட்சி துவங்கியிருக்கிறாரே என்றெல்லாம் பார்க்கலாம். ஓபிஎஸ் எங்களது சித்தியின் ஆதரவோடு தான் முதலமைச்சர் ஆனார் என்பது தான் உண்மை. பிறரின் தூண்டுதலின் பேரில் தர்மயுத்தம் துவங்கினார். இன்றைக்கு அவர் செய்தது தவறு என்பதை உணர்ந்து தனி அணியாக செயல்படுகிறார்.
ஜெயலலிதாவின் பாதையில் இருந்து விலகி தவறான பாதையில் சென்றதால் தான் வேறு வழி இன்றி அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஆரம்பிக்கப்பட்டது. பழனிசாமி கம்பெனி எங்களுக்கு வலுவான பாதை உள்ளது என்று கூறியும், நீதிமன்றமே அவர்களுக்கு சின்னத்தை அளித்தும், பொருளாதார ரீதியாக செலவுகள் செய்தும் ஈரோட்டில் 43,000 வாக்குகளை பெற்றார்கள்.
நாங்கள் தான் பிரதான எதிர்க்கட்சி என்று கூறி, முயற்சியும் செய்து அவர்களால் அந்த இடத்தை பிடிக்க முடியவில்லை. இடைத்தேர்தல் முடிவு மலைக்கும், மடுவுக்கும் உள்ள நிலை ஆக காணப்பட்டது.
இன்றைக்கு இரட்டை இலை இருக்கும் காரணத்தினால் தான் தொண்டர்கள் என்ன செய்வது என்று தெரியாமல், வேறு வழி இல்லாமல் அங்கு இருக்கிறார்கள். பழனிசாமியின் பக்கம் பலவீனம் அடைந்து வருகிறது. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக ஒரு வட்டார கட்சியாக, ஒரே சமுதாயத்தை சார்ந்த கட்சியாக மட்டுமே உள்ளது.
ஆகவே ஒன்றாக அணி திரண்டு உறுதியாக திமுகவை வீழ்த்துவோம் என்ற இந்த ஆறாவது ஆண்டு துவக்க விழாவில் உறுதி அளிக்கிறேன். தன்னலமற்ற இதயம் எதிர்பார்க்காத கொள்கையின் அடிப்படையில் சென்று கொண்டிருக்கும் எங்கள் இயக்கம் நிச்சயம் வெற்றி பெறும்.
மடியில் கனம் இருப்பதால் தான் வழியில் பயம் இருக்கும் என்பது போல எடப்பாடி பழனிசாமி அருகில் உள்ள முன்னாள் அமைச்சர்கள் திமுகவுடன் சமரசமாக செல்கின்றனர். திமுக இன்றைக்கு ஆட்சி அதிகாரத்திற்கு வந்ததற்கான காரணமே பழனிசாமியின் அதிகாரமும் அகங்காரமும், ஆணவம் என்பது எல்லாருக்கும் தெரியும். தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சினிமாவில் கதாநாயகனாக நடித்தாலும் அரசியலில் அவர் ஓர் காமெடியன் போல் பேசிக் கொண்டிருக்கிறார்.
நீட் தேர்வு பொறுத்தவரை உச்சநீதிமன்ற தீர்ப்பு, மத்திய அரசாங்கம், பாராளுமன்றம் மூலமாக ஏற்றிய சட்டம், என பல காரணங்களை வைத்து இவர்கள் மக்களை ஏமாற்றுகிறார்கள்.
ஓ.பி.எஸ்ஸின் அம்மா மறைவுக்கு இரங்கல் தெரிவித்தேன். அதைத் தவிர அரசியல் ரீதியாக நான் ஏதும் பேசவில்லை. அவர் கருத்தும் ஒரு விதத்தில், 'ஜெயலலிதா தொண்டர்கள் அனைவரும் ஒன்று திரண்டு வர வேண்டும்' என்பதால் எங்களின் கருத்து ஒத்துப் போவதால் அவருடன் பேசுவதில் தவறில்லை. அடுத்த முறை அவருடன் சந்திப்பு பொதுவெளியில் இருக்கும். கூட்டணி குறித்து இப்போது நாங்கள் முடிவு செய்ய முடியாது. திமுகவை விழ்த்த நாங்கள் தயாராக இருக்கிறோம்" என கூறினார்.
இதையும் படிங்க: சென்னை ஐஐடியில் தொடரும் தற்கொலைகள்.. இயக்குநர் காமகோடி விளக்கம்..