தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மகளிர் சுய உதவிக் குழுக்களின் விற்பனைக் கண்காட்சியை தொடங்கி வைத்த அமைச்சர் உதயநிதி - உதயநிதி

தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் தயாரிக்கும் பொருட்களின் புத்தாண்டு – பொங்கல் விற்பனைக் கண்காட்சியினை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

அமைச்சர் உதயநிதி தொடங்கி வைத்தார்
அமைச்சர் உதயநிதி தொடங்கி வைத்தார்

By

Published : Dec 31, 2022, 9:27 AM IST

சென்னை: தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் ஆங்கிலப் புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, மகளிர் சுய உதவிக் குழுக்கள் தயாரிக்கும் பொருட்களின் விற்பனைக் கண்காட்சியினை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று (டிசம்பர் 30) நுங்கம்பாக்கம் அன்னை தெரசா மகளிர் கல்லூரி வளாகத்தில் தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்வைத் தொடர்ந்து மகளிர் சுய உதவிக் குழுக்களின் தயாரிப்புப் பொருட்கள் அடங்கிய, பொங்கல் பரிசுப் பெட்டகங்களை இணையதளம் மூலம் விற்பனை செய்யும் திட்டத்தை தொடங்கி வைத்த அமைச்சர் உதயநிதி, கண்காட்சியில் அமைக்கப்பட்டுள்ள விற்பனை அரங்குகளைப் பார்வையிட்டு, அவர்களுடன் உரையாடி, அவர்களின் தயாரிப்புப் பொருட்களை வாங்கினார்.

மகளிர் சுய உதவிக் குழுக்களின் விற்பனைக் கண்காட்சி

இக்கண்காட்சியில், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் கீழ் அனைத்து மாவட்டங்களிலும் செயல்பட்டு வரும் மகளிர் சுய உதவிக் குழுக்களின் தயாரிப்புப் பொருட்களான முந்திரிப் பருப்பு வகைகள், வீட்டு உபயோகப் பொருட்கள், பட்டு மற்றும் பருத்திப் புடவைகள், கண்ணாடி ஓவியங்கள், கைவினைப் பொருட்கள், பொம்மைகள், சிறுதானியங்கள், பாரம்பரிய அரிசி வகைகள், இயற்கை உரங்கள், தேன் போன்ற பல பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

மகளிர் சுய உதவிக் குழுக்களின் விற்பனைக் கண்காட்சி

மேலும், தமிழ்நாடு நகர்ப்புர வாழ்வாதார இயக்கம், வாழ்ந்து காட்டுவோம் திட்டம் ஆகியவற்றின் வழிகாட்டுதலில் செயல்படும் சுய உதவிக் குழுக்கள், திருநங்கையர் சுய உதவிக் குழுக்களும் தங்களின் தயாரிப்புப் பொருட்களை விற்பனை செய்ய உள்ளனர். பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக சுற்றுச்சூழலுக்கு தீங்கு ஏற்படுத்தாத துணிப் பைகள், மஞ்சப் பைகள் விற்பனை செய்யும் அரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளன.

பாரம்பரிய சுவை மிகுந்த உணவுகளை உண்டு களித்திட உணவு அரங்கமும் அமைக்கப்பட்டுள்ளது. 2022 டிசம்பர் 30ஆம் தேதி முதல் 2023 ஜனவரி 12ஆம் தேதி வரை நாள்தோறும் காலை 10.00 மணி முதல் இரவு 08.00 மணி வரை நடைபெறும் இக்கண்காட்சிக்கு அனுமதி இலவசம்.

மகளிர் சுய உதவிக் குழுக்களின் விற்பனைக் கண்காட்சி

மகளிர் சுய உதவிக் குழுக்களின் தயாரிப்புப் பொருட்களின் விற்பனைக் கண்காட்சிக்கு அனைவரும் வருகை தந்து, மகளிர் சுய உதவிக் குழுக்கள் தயாரித்த தரமான பொருட்களை வாங்கி பயனடைவதோடு, மகளிர் சுய உதவிக் குழுக்களின் பொருளாதார முன்னேற்றத்திற்கு உதவிட வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:விவசாயிகளுக்கு ரூ.50.88 கோடி இடுபொருள் நிவாரணம்

ABOUT THE AUTHOR

...view details