சென்னை: இந்திய ஆட்சிப் பணி (IAS), இந்திய காவல் பணி (IPS), இந்திய வனப்பணி (IFS), இந்திய வருமானப்பணி (IRS - GST & IT) மற்றும் இந்தியன் ரயில்வே அதிகாரிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டிகள் 2023 - பிப்ரவரி 12, 25, மார்ச் 05 மற்றும் 12 ஆகிய தேதிகளில் சென்னை - போரூர், ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரியிலும், பிப்ரவரி 19ஆம் தேதி மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவக் கல்லூரியிலும், கொளப்பாக்கம் ஒமேகா இன்டர்நேஷனல் பள்ளியிலும் நடைபெறுகிறது.
இந்த கிரிக்கெட் போட்டிகளின் இறுதிபோட்டி மார்ச் 12ஆம் தேதி அன்று போரூரில் நடைபெறுகிறது. இதனைத் தொடர்ந்து கிரிக்கெட் போட்டிகள் நிறைவடைந்த பின்னர் சென்னை, நேரு விளையாட்டு அரங்கில் கால்பந்து போட்டிகளும், நேரு உள் விளையாட்டு அரங்கில் இறகுப்பந்து போட்டிகளும் நடத்தப்படவுள்ளன.
இன்று தமிழ்நாடு ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அணிகளுக்கிடையே நடைபெற்ற முதல் கிரிக்கெட் போட்டியினை போரூர், ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரியில் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மேலும், இன்று நடைபெற்ற போட்டியில் முதலில் விளையாடிய ஐபிஎஸ் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 102 ரன்கள் எடுத்த நிலையில் ஐஏஎஸ் அணி 103/4 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
பிறகு உதயநிதி ஸ்டாலின், ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி, அறிவியல் விளையாட்டு மையத்தில் உள்ள கிரிக்கெட் வலைப்பயிற்சி, பளுதூக்குதல், துப்பாக்கி சுடுதல், நீச்சல், சைக்கிளிங் பயிற்சி மையங்கள், மற்றும் சிந்தடிக் ஹாக்கி மைதானம் ஆகிய விளையாட்டு கட்டமைப்புகளை பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க:உலக இரும்பு மனிதன் போட்டி - குமரியைச் சேர்ந்த சாதனையாளர் தீவிரப் பயிற்சி