அமைச்சர் டி.ஆர்.பி ராஜா மகள் நிலா ராஜா பேச்சு சென்னை:டெல்லியில் 66வது தேசிய அளவிலான துப்பாக்கிச் சுடுதல் போட்டி நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் ஷாட் கன் ஜூனியர் பெண்களுக்கான தனி நபர் பிரிவில், தமிழ்நாட்டைச் சேர்ந்த நிலா ராஜா பங்கேற்று தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார். இவர் தமிழ்நாடின் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவின் மகளாவார்.
கடந்த ஆண்டு ஜூனியர் மகளிர் பிரிவில், தேசிய அளவில் தங்கத்தை வென்றவர் நிலா ராஜா என்பது குறிப்பிடதக்கது. இந்த நிலையில், டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தடைந்த நிலா ராஜாவுக்கு, விமான நிலையத்தில் அவரது உறவினர்கள், பயிற்சியாளர்கள், பெற்றோர் ஆகியோர் உற்சாகமாக வரவேற்பு அளித்தனர்.
இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த நிலா ராஜா கூறுகையில், “தமிழ்நாட்டிற்கு முதல் முறையாக பதக்கம் வென்றபோது மிகவும் பெருமையாக இருந்தது. அதே போன்று, இரண்டாவது முறையும் பதக்கம் வென்றதில் மிக பெருமையாக உள்ளது. அனைவருக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நான் போட்டியில் வெற்றி பெற்ற பின், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாத்தா என்னை அழைத்து வாழ்த்து
கூறினார். உதய் மாமாவும் என்னை தொலைபேசியில் அழைத்து வாழ்த்து கூறினார். தேசிய தரத்தில் சென்னையில் துப்பாக்கிச் சுடுதல் மையம் அமைத்துக் கொடுப்பதாக உதய் மாமா தெரிவித்துள்ளார். இந்த வெற்றிக்கு முழுக்க முழுக்க தமிழக அரசு உதவிகரமாக இருந்தது” எனக் கூறினார்.
இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் தனது X தளத்தில் நிலா ராஜாவிற்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். அதில், “ வாழ்த்துக்கள் நிலாராஜாபாலு. 66வது தேசிய துப்பாக்கிச் சுடுதல் சாம்பியன்ஷிப்பில் ஜூனியர் பெண்கள் பிரிவி,ல் தொடர்ந்து இரண்டாவது முறையாக தங்கம் வென்றதற்காக, உங்களது அளப்பரிய திறமை தமிழ்நாட்டுக்கே பெருமை. உயர்ந்த இலக்கை வைத்திருங்கள் மற்றும் மாநிலத்திற்கு மேலும் புகழ்களைக் கொண்டு வாருங்கள்” என கூறியுள்ளார்.
இதையும் படிங்க:தெலங்கானாவில் காங்கிரஸுக்கு திமுக ஆதரவு!