சென்னை:பல்லாவரம் ஜி.எஸ்.டி சாலையில் மேம்பாலப் பணிக்காக கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் தடுப்புகளை ஏற்படுத்தி சாலை மூடப்பட்டது. இதனால், சென்னையில் இருந்து பல்லாவரம் ஜி.எஸ்.டி சாலையில் வலதுபுறம் திரும்ப முடியாமல் வாகன ஓட்டிகள் பான்ஸ் மேம்பாலம் வரை சென்று திரும்பி வந்தனர்.
அதேபோல், பம்மல் பகுதியில் உள்ள பல்லாவரம் ஜி.எஸ்.டி சாலையிலும் திரும்ப முடியாமல் வாகன ஓட்டிகள் வெகு தொலைவு சுற்றி வந்தனர். இதனால் காலை மற்றும் மாலை வேளைகளில், அப்பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு மாணவர்களை இருசக்கர வாகனங்களில் ஏற்றிச் செல்லூம் பெற்றோர்கள் உள்ளிட்ட மற்ற வாகன ஓட்டிகள் மிகுந்த பாதிப்படைந்தனர்.
மேலும், பல்லாவரம் பகுதிகளில் வியாபாரிகளும் கடுமையாக பாதிப்படைந்தனர். ஆனால், பல்லாவரம் மேம்பாலம் பணிகள் நிறைவடைந்து, பயன்பாட்டிற்காக திறக்கப்பட்ட நிலையிலும் சாலையில் நடுவே உள்ள தடுப்புகள் அகற்றப்படாமல் இருந்தது. மேலும், அப்பகுதியில் இருக்கும் தடுப்புகளை அகற்றுவது குறித்து பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்தனர்.
அதனை அடுத்து, தாம்பரம் மாநகர காவல் துறை சார்பில் 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய தானியங்கி சிக்னல் அமைக்கப்பட்டு, அங்கு இருந்த தடுப்புகளையும் அகற்றி, எளிதில் ஜி.எஸ்.டி சாலையை சென்றடையும் விதமாக வழிவகை ஏற்படுத்தப்பட்டு உள்ளது.