சென்னை:224 தொகுதிகள் கொண்ட கர்நாடக சட்டப்பேரவைக்கு மே 10ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்நிலையில் இன்று (மே 13) தேர்தல் முடிவுகள் வெளியாகின. இதில் காங்கிரஸ் 136 இடங்களில் வென்று, பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. பாஜக 65 இடங்களில் வென்றுள்ளது. கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி பொறுப்பேற்க உள்ள நிலையில், கர்நாடகா மாநிலத்தில் காங்கிரசின் வெற்றி குறித்து திமுக செய்தி தொடர்புத் தலைவர் டிகேஎஸ் இளங்கோவன் ஈடிவி பாரத் ஊடகத்திற்கு சிறப்புப் பேட்டி வழங்கியுள்ளார்.
அப்போது பேசிய அவர், “கர்நாடகா மாநிலம் கடந்த தேர்தலில் பாஜக தோல்வி அடைந்த நிலையில், கடந்த தேர்தலில் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வெற்றிபெற்ற நிலையில் பாஜக, சட்டப்பேரவை உறுப்பினர்களை விலைக்கு வாங்கி, ஆட்சி கவிழ்த்து, ஆட்சிக்கு வந்தவர்கள் பாஜகவினர். கர்நாடக மக்கள் கடந்த முறையே பாஜகவை ஏற்றுக்கொள்ளவில்லை. இந்த முறை உறுதியாக, காங்கிரசுக்கு முழுமையான அதிகாரத்தைக் கொடுக்க வேண்டும் என்று மக்கள் கொடுத்திருக்கிறார்கள்.
பாஜகவை பொறுத்தவரை இலவசங்கள் தேவை இல்லை என்று பேசிவிட்டு வேறு வழி இல்லாமல், தேர்தல் அறிக்கையில் இலவசங்களை அறிவிக்கும் நிலைக்கு, அவர்களுடைய தோல்வியை அவர்கள் எதிர்பார்த்து இருக்கின்றனர். இதன் விளைவாகத்தான் மோடி வீதி வீதியாக தேர்தல் பரப்புரை செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டார். பாஜகவே எதிர்பார்த்த தோல்வி இது.
காங்கிரஸ் இந்த வெற்றியோடு நின்றுவிடாமல், அனைத்து கட்சிகளையும் ஒருங்கிணைப்பதில் ஈடுபட்டு, பாஜகவுக்கு எதிரான ஒரு வலுவான கூட்டணியை அமைப்பதற்கு நடவடிக்கை எடுத்தால்தான் ஒன்றிய அரசுக்கான தேர்தலிலும் பாஜக தோல்வி அடையும். இல்லையென்றால், பாஜக மீண்டும் வருவதற்கு வாய்ப்பு வந்துவிடும் என்ற எண்ணம் இருக்கிறது.
வருகின்ற நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் அனைத்துக் கட்சிகளையும் ஒருங்கிணைத்து தேர்தலைச் சந்திக்க வேண்டும். எங்களுடைய கூட்டணி கட்சி என்பதில் காங்கிரஸின் வெற்றி எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. பாஜகவிற்குச் செல்வாக்கான மாநிலம் என்றால் அது கர்நாடக மாநிலம் தான்.
இந்தத் தோல்வி மூலம் இனி வரும் காலங்களில் தென்னகத்தில், பாஜக உள்ளே வர முடியாது என்ற நிலையை இந்த வெற்றி உறுதி செய்து இருக்கிறது. கர்நாடகத்தில் ஊழல் கட்சியாகவும், பேசுவது ஒன்றும் செய்வது ஒன்றுமாக இருப்பதனாலேயே, மக்கள் பாஜகவிற்கு இந்த பாடத்தை கொடுத்துள்ளனர்.