சென்னை:தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று (அக்.19) நடந்த மூன்றாவது நாள் கூட்டத்தொடரில், மத்திய மாநில அரசுகள் அறிவித்த பரந்தூர் விமான நிலையம் குறித்த விவாதத்தில் சிறப்புக் கவன தீர்மானம் முன்மொழியப்பட்டது. அப்போது, விமான நிலையத்துக்காக விவசாய நிலங்களைத் தவிர்த்து மற்ற நிலங்களை எடுக்கலாமே என எம்.எல்.ஏக்கள் வேல்முருகன், ஜி.கே.மணி உள்ளிட்டோர் கேள்விகள் எழுப்பினர்.
3.5 கோடி பயணிகளைக் கையாளலாம்: இதற்குப் பதில் அளித்துப் பேசிய தொழிற்துறை அமைச்சர் தங்கம்தென்னரசு, தற்போது சென்னை விமான நிலையத்தில் 2.2 கோடி பேர் பயணிகள் கையாளப்படுகின்றனர். கடந்த 2009 முதல் 2019 வரை 9% ஆக பயணிகளின் கையாளுதல் வளர்ச்சியை அடைந்துள்ளது. வருகின்ற 2028 ஆம் ஆண்டில் 3.5 கோடி பயணிகளைக் கையாள்வதற்கு வாய்ப்பு இருக்கிறது. மேலும், கடந்த 2008 ஆம் ஆண்டில் சென்னை விமான நிலையம் பயணிகளைக் கையாள்வதில் மூன்றாவது இடத்திலிருந்தது தற்போது ஐந்தாவது இடத்திற்குப் பின் தங்கியுள்ளது.
மேலும், நமது அண்டை மாநிலமான ஹைதராபாத் மற்றும் பெங்களூர் உள்ளிட்ட மாநிலங்களின் விமான நிலையங்கள் பயணிகளைக் கையாளுவதில் சிறப்பாக உள்ளது. இதன் காரணமாக, தற்போது பெங்களூர் விமான நிலையம் பயணிகளைக் கையாள்வதில் 12 சதவீதத்துடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. மேலும், சரக்கு போக்குவரத்தில் 7% சதவீதம் மட்டுமே கையாளுகின்றோம். இரவில் மட்டும் தான் சரக்கு போக்குவரத்து அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
பொருளாதார முன்னேற்றம்:பொருளாதார ரீதியில் முன்னேற்றம் அடைய வேண்டுமென்றால் புதிய விமான நிலையம் தேவை என்று தெரிவித்தார். பரந்தூர் மற்றும் பரனூர் உள்ளிட்ட 11 இடங்களில் ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆப் இந்தியா ஆய்வு மேற்கொண்டு நான்கு இடங்களைத் தேர்வு செய்தது.
பரந்தூரில் புவியியல் அமைப்பு, நிலப்பரப்பு சூழலைக் கருத்தில் கொண்டே அங்கு புதிய விமான நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கருத்துக்கேட்பு கூட்டத்தில் பங்கேற்ற 13 கிராம மக்கள் தங்கள் கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.
சென்னை விமான நிலைய விரிவாக்கத்திற்கு, நில மதிப்பீடு 306 ஏக்கர் வீதம் ரூ.10,500 கோடி செலவு ஏற்படும் என்பதால் நடைமுறை சிக்கல் உள்ளது.