தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'பாஜகவுக்குப் பல்லக்கு தூக்குவதே பன்னீர்செல்வத்தின் தலையாய பணி' - அமைச்சர் தங்கம் தென்னரசு

சமத்துவ விரோத பாஜகவுக்குப் பல்லக்கு தூக்குவதே பன்னீர்செல்வத்தின் தலையாய பணி என தொழிற்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு விமர்சித்துள்ளார்.

thangam thennarasu minister thangam thennarasu thangam thennarasu replay to ops minister thangam thennarasu replay to ops தொழிற்துறை அமைச்சர் தொழிற்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தங்கம் தென்னரசு அறிக்கை ஓபிஎஸ்க்கு பதிலளித்த தங்கம் தென்னரசு
தங்கம் தென்னரசு

By

Published : Feb 6, 2022, 5:22 PM IST

சென்னை:தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கடந்த ஜனவரி மாதம் 26ஆம் தேதி, காணொலிக் காட்சி வாயிலாக நடைபெற்ற கூட்டத்தில், மக்களின் நலன் கருதி 'அனைத்திந்திய சமூக நீதிக் கூட்டமைப்பு' தொடங்கப்படும் என்ற அறிவிப்பினை வெளியிட்டார்.

மேலும் இது தொடர்பாக அனைத்து கட்சியினருக்கும் கடிதம் மூலம் இக்கூட்டமைப்பில் இணையுமாறு கேட்டுக்கொண்டிருந்தார். இதற்கு சமூகநீதி கூட்டமைப்பில் இணைய விருப்பம் இல்லை என அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

பதில் அறிக்கை...

இந்த அறிவிப்பையடுத்து, பலரும் பன்னீர்செல்வத்தினை விமர்சித்து வந்தனர். இந்நிலையில் இது குறித்து தொழிற்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், 'தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்க இருக்கும், அனைத்து இந்திய சமூகநீதிக் கூட்டமைப்பில் சேர்வதற்கு விடுத்த அழைப்பை ஏற்க மறுத்து, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ''அதிமுகவிற்கும் – சமூகநீதிக்கும் என்ன சம்பந்தம், எங்களை ஏன் அழைக்கிறீர்கள்'' என்று அறிக்கை அளித்திருப்பது வேடிக்கை கலந்த விநோதமாக இருக்கிறது.

மறைந்த ஜெயலலிதா நினைவிடத்தில் இருந்து தர்மயுத்தம் என்ற நாடகத்தை நடத்தி, பின்னர் பாஜக-வின் தயவில் பழனிசாமியுடன் இணைந்து துணை முதலமைச்சர் பதவி அனுபவித்த அவர், சமூகநீதி பற்றியெல்லாம் கவலைப்படமாட்டார் என்பது தெரிந்ததுதான் என்றாலும், அரசியல் நாகரிகம் கருதியும், சமூகநீதியில் தமிழ்நாட்டில் அனைவரையும் அரவணைத்துச் செல்ல வேண்டும் என்பதற்காகவே அதிமுகவையும் அழைத்தார், முதலமைச்சர் ஸ்டாலின்.

69 விழுக்காடு இடஒதுக்கீடிற்கு திமுகவே காரணம்...

இடஒதுக்கீட்டை முதலில் 25 விழுக்காட்டிலிருந்து 31 விழுக்காடாக உயர்த்தியதே கருணாநிதி தான். பிற்படுத்தப்பட்டோருக்கு ஒன்பதாயிரம் ரூபாய் வருமான உச்சவரம்பு நிர்ணயித்த மறைந்த எம்ஜிஆரைக் கடுமையாக திமுக எதிர்த்த காரணத்தால் மட்டுமே அந்த உத்தரவை திரும்பப் பெற்றது யார் என்பது 'ஜானகி அணியில்' இடம்பெற்றிருந்த ஓபிஎஸ்-க்கே தெரியவில்லை என்பது ஆச்சரியமாக இருக்கிறது.

மண்டல் கமிஷன் பரிந்துரைகளைச் செயல்படுத்த அதிமுக துரும்பைக் கூட கிள்ளிப்போடவில்லை. அதனைச் செயல்படுத்த சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி, அப்போது இருந்த பிரதமர், சமூகநீதிக் காவலர் வி.பி.சிங்கிற்கு கடிதம் எழுதி வலியுறுத்தி, பிற்படுத்தப்பட்டோருக்கு 27 விழுக்காடு இடஒதுக்கீட்டை ஒன்றிய அரசுப் பணிகளில் பெற்றுக்கொடுத்தவர், கருணாநிதி.

விளிம்பு நிலை மக்களை கைதூக்கிவிட, பட்டியலின மக்களின் இடஒதுக்கீட்டை 16 விழுக்காட்டிலிருந்து 18ஆக உயர்த்தி, பழங்குடியினருக்கு 1 விழுக்காடு தனியாக கொடுத்து, இன்றைக்கு உள்ள 69 விழுக்காடு இடஒதுக்கீட்டை இந்தியாவிற்கே முன்னோடியாகத் தமிழ்நாட்டில் கொண்டு வந்தது, திமுக ஆட்சி.

அந்த 69 விழுக்காடு இடஒதுக்கீட்டிற்கு மண்டல் தீர்ப்பால் ஆபத்து வருகிறது என்று தெரிந்தவுடன், அதற்கான அழுத்தத்தைக் கொடுத்து, சட்டப் பாதுகாப்பு கொண்டுவர வைத்தது கருணாநிதியும், திமுக-வும், திராவிடர் கழகமும்தான் என்பதை மீண்டும் நினைவுபடுத்திக் கொள்ள பன்னீர்செல்வம் பழைய வரலாறுகளை சற்று புரட்டிப்பார்க்க வேண்டும்.

போட்ட சபதம் என்னாச்சு...

கச்சத்தீவை திமுக தாரைவார்க்கவும் இல்லை. விட்டுக்கொடுக்கவும் இல்லை என்பதுதான் வரலாற்று உண்மை. கச்சத்தீவு கொடுக்கப்பட்டதை எதிர்த்தவர் அப்போது முதலமைச்சராக இருந்த கருணாநிதி. 29 ஜூன் 1974 அன்று பிரதமருக்கே கடிதம் எழுதி கடுமையாக எதிர்த்தவர் அவர். திமுக மக்களவை உறுப்பினர்களை, அவையிலேயே எதிர்ப்புத்தெரிவித்து முழக்கமிடச் செய்தவர், அவர்.

திமுக பொதுக்குழுவை கூட்டி எதிர்ப்புத் தெரிவித்து தீர்மானம் போட்டு, தமிழ்நாடு முழுவதும் கண்டனப் போராட்டங்களை அவர் நடத்திய வரலாறு எல்லாம் பாவம் பன்னீர்செல்வத்திற்கு தெரிந்திருக்க வழியில்லை.

வேண்டுமென்றால், சட்டப்பேரவையில் உள்ள இது பற்றிய பதிவேடுகளை படித்துப் பார்க்கலாம். அப்படியே 15 ஆகஸ்ட் 1991 அன்று கோட்டையில் கொடியேற்றிய அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா 'கச்சதீவை மீட்டே திருவேன்' என்று போட்ட சபதத்தையும் கூடவே படித்துப் பார்க்கலாம்.

இந்திய - இலங்கை நல்லுறவிற்காகவே, கச்சத்தீவு விட்டுக் கொடுக்கப்பட்டது என்று அன்றைய பிரதமர் நரசிம்மராவ், முதலமைச்சராக இருந்து 30 செப்டம்பர் 1994 அன்று ஜெயலலிதாவுக்கு எழுதிய கடிதத்தைக் கூட இனியாவது படித்து பயன்பெறலாம். மேலும் உண்மையை அறிந்துகொள்ளலாம்.

எங்கு இருந்தார் பன்னீர்...

தமிழ்நாட்டிற்கான திட்டங்களைத் தடுத்துவிட்டதாக பன்னீர்செல்வம் கூறுகிறார். அப்படி ஒரு திட்டத்தைச் சுட்டிக்காட்ட முடியுமா. தென்மாவட்டங்களின் பொருளாதாரத்தையும் - அங்குள்ள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பையும் கொடுக்கும் சேது சமுத்திரத் திட்டத்தை தடுத்து நிறுத்தியது யார்.

உச்ச நீதிமன்றத்தில், முதலமைச்சர் என்ற பொறுப்பில் இருந்துகொண்டே, இந்தத் திட்டத்தை அனுமதிக்கக் கூடாது என்று வழக்குப் போட்டவர்தானே மறைந்த ஜெயலலிதா. தான் வாழும் தென் மாவட்டப்பகுதிக்கான இந்தத் திட்டத்தை அதிமுக ஆட்சியே தடுத்தபோது பன்னீர்செல்வம் எங்கு இருந்தார்.

மதுராவயல் – துறைமுகம் பறக்கும் சாலைத்திட்டத்தைப் பாழ்படுத்தியது யார்? கருணாநிதி கட்டிய புதிய தலைமைச் செயலகத்தைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கியது யார்? அப்படிப்பட்ட அலங்கோல, ஆணவ, தமிழ்நாட்டின் விரோத அதிமுக அமைச்சரவையில்தான் ஓ. பன்னீர்செல்வமும் பதவி சுகம் அனுபவித்துக்கொண்டு இருந்தார்.

காவிரி பிரச்னை - எட்டமுடியாத இடத்துக்கு கொண்டு வந்தது யார்...?

“மெட்ரோ ரயில் வேண்டாம். மோனோ ரயில் போதும்” எனப் பேசி, மெட்ரோ ரயில் திட்டத்தைத் தடுத்து நிறுத்தி விட்டு, பிறகு வேறு வழியின்றித் தொடங்கியது யார் ஆட்சி?, அதிமுக ஆட்சிதானே. காவிரியில் 14.75 டி.எம்.சி தண்ணீர் உரிமையை தமிழ்நாடு இழந்து விட்டு நிற்பதற்கு அதிமுக தான் காரணம் என்பதை பொதுப்பணித்துறை அமைச்சராகவும் இருந்த ஓ.பன்னீர்செல்வத்திற்குத் தெரியாதா அல்லது தர்மயுத்தம் போல் அதையும் மறந்துவிட்டாரா.

காவிரி நடுவர் மன்றம், இடைக்காலத் தீர்ப்பு பெறும் உரிமை, இறுதித் தீர்ப்பு, பிரதமர் தலைமையில் காவிரி நதிநீர் ஆணையம் எல்லாவற்றையும் அமைத்துக் கொடுத்தவர் ‘காவிரி மைந்தரான’ கருணாநிதி.

ஆனால் நடுவர் மன்றத் தீர்ப்பு, இறுதித் தீர்ப்பு, இறுதித் தீர்ப்பின் அடிப்படையில் அமைந்த காவிரி மேலாண்மை ஆணையம் அனைத்தையும் பிசுபிசுக்க வைத்து, இன்றைக்குக் காவிரிப் பிரச்னையில் ஒரு தீர்வையும் எட்ட முடியாத நிலைக்குக் கொண்டு வந்தது அதிமுக ஆட்சிதான் என்பதை ஓ. பன்னீர்செல்வதிற்கு நினைவூட்டக் கடமைப்பட்டுள்ளேன்.

அதுமட்டுமல்ல, எதிர்க்கட்சி வரிசையில் இருந்துபோது கூட, ‘காவிரி உரிமை மீட்புப் பயணம்’ நடத்தி, காவிரியில் தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்டியவர் மு.க.ஸ்டாலின் என்பதை நாடறியும்.

கூட்டாட்சித் தத்துவத்திற்காக, ராஜமன்னார் குழு அமைத்து அறிக்கை பெற்று, அதன் அடிப்படையில் ஒன்றிய அரசு “ஒன்றிய – மாநில உறவுகள்” குறித்து சர்க்காரியா கமிஷன் அமைக்க வழிவகுத்தது, திமுக. ஆனால் அதிமுகவிற்கும் கூட்டாட்சித் தத்துவத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதற்கு ஓ. பி. எஸ். கடிதமே சாட்சியமாக நிற்கிறது.

ஓபிஎஸ் கணக்கு...

அடுத்து அவர் நிதி பற்றி பேசுகிறார். நான் கேட்கும் கேள்வி ஒன்றே ஒன்றுதான். ஓ.பன்னீர்செல்வம் நிதி அமைச்சர் பொறுப்பிலிருந்து விலகும் போது, தமிழ்நாட்டின் கடன் 5 லட்சம் கோடி ரூபாய்க்கும் மேல்.

அப்படி கடன் வாங்கி, ஊழல் செய்து தமிழ்நாட்டை கடனாளி மாநிலமாக்கி விட்டுப்போனவர்கள், 10 ஆண்டு கால ஆட்சியில் இருந்தபோது ஒன்றிய அரசிடம் நிதி சுதந்திரத்தைப் பெற முடியாதவர்கள், இன்றைக்கு திமுக மீது பழி போட முனைவதைப் பார்த்தால், ‘கூரை ஏறி கோழி பிடிக்கத் தெரியாதவர்’ என்று தொடங்கும் பழமொழிதான் நினைவுக்கு வருகிறது.

அனைத்திந்திய சமூகநீதிக் கூட்டமைப்பில் இணையாமல் இருப்பது அதிமுக-வின் விருப்பம். ஆனால், “நீட் தேர்வு ரத்து” போன்ற மக்கள் நலன் சார்ந்த பிரச்னைகளில் கவனம் செலுத்த வேண்டும் என்று திமுக தலைவரைப் பார்த்துச் சொல்லும் ஓ.பன்னீர்செல்வம் இன்று கூட்டப்பட்ட மிக முக்கியமான நீட் கூட்டத்திற்குக்கூட வராமல் போனது “ஊருக்கு உபதேசம்” என்ற இன்னொரு பழமொழியை நினைவுபடுத்துகிறது.

பல்லக்கு தூக்குவதே தலையாய பணி...

மறைந்த ஜெயலலிதாவை தலைவராக ஏற்றுக்கொண்டு இருந்த ஓ.பன்னீர்செல்வம் பாஜக-வின் அழுத்தத்தைத் தாங்க முடியாமல் எப்படி பழனிசாமியும் முதலமைச்சராக ஏற்றுக் கொண்டு இருந்தாரோ, அதேபோல் ஒன்றிய பாஜக அரசு நீட் விதிவிலக்கு மசோதாவை ஆளுநர் மூலம் நிராகரித்ததை திசைதிருப்ப திமுக தலைவருக்கு ஏழு பக்கம் கடிதம் எழுதியிருக்கிறார் என்றே தோன்றுகிறது.

பாஜகவின் தயவை இப்போதும் பெற திமுக தலைவரை விமர்சிக்கும் கட்டாயம் ஓ. பன்னீர்செல்வத்திற்கு ஏற்பட்டிருக்கிறது. ஏனென்றால், எங்கள் கழகத் தலைவரை விமர்சித்தால் மட்டுமே தங்களுக்குப் பிழைப்பு என்று இருப்பவர்கள், சமூகநீதி கூட்டமைப்பில் இணையமாட்டோம் என்பதில் வியப்பும் இல்லை, கடிதம் எழுதுவதில் புதிரும் இல்லை.

ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட முன்னாள் அதிமுக அமைச்சர்களுக்கு, தங்கள் வினையால், சமூகநீதி, சமத்துவ விரோத பாஜகவுக்குப் பல்லக்குத் தூக்குவதே தலையாய பணியாக இருப்பதைத்தான் அவரது அறிக்கை உணர்த்துகிறது” என தங்கம் தென்னரசு குறிப்பிட்டிருந்தார்.

இதையும் படிங்க: வேட்பாளரின் கணவரை அறைந்த திமுக நகர பொறுப்பாளர்

ABOUT THE AUTHOR

...view details