சென்னை:துணை மின் நிலையங்களில் மழைநீர் தேங்கியுள்ளதால் பொதுமக்களின் நலன் கருதி எச்சரிக்கையுடன் மின் விநியோகம் வழங்கும் பணி படிப்படியாக நடைபெற்று வருவதாக தமிழக மின்சாரத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்து உள்ளார். பொதுமக்கள் இந்த அசாதாரணமான சூழலை புரிந்து கொண்டு மின் விநியோக நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டுமென்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக நிதி, மின்சாரம் மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளதாவது, "நேற்று காலை 12 மணி நிலவரப்படி, 112 மெகாவாட் ஆக இருந்த சென்னை நகரின் தேவை இன்று (05.12.2023) மாலை 7:30 மணி நிலவரப்படி, 1,488 மெகாவாட் ஆக அதிகரித்துள்ளது. இன்று மதியம் 12 மணி நிலவரப்படி, சென்னை மாநகரத்தின் மையப்பகுதிகளில் மின்சாரம் முழுமையாக மீட்டெடுக்கப்பட்டு தற்போது சீரான மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. சென்னையில் மொத்தமுள்ள 1,812 மின்னூட்டிகளில் (FEEDERS) 1,610 மின்னூட்டிகள் முழுமையாக சீரமைக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 202 மின்னூட்டிகளை சீரமைக்கும் பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
எந்தெந்த பகுதிகளில் மின் விநியோகம்: சென்னை மேற்கு மின் பகிர்மான வட்டத்திற்குட்பட்ட அன்னை நகர், அம்பத்தூர் தொழிற்பேட்டை, அம்பத்தூர், அரும்பாக்கம், ஆவடி, காமராஜ் நகர், கொரட்டூர், மேனாம்பேடு, நொளம்பூர், கள்ளிக்குப்பம், ஜெ.ஜெ. நகர், சாந்தி காலனி, அண்ணா நகர், சேத்துப்பட்டு, SAF Games village, ஸ்பார்ட்டன் நகர், கலெக்டர் நகர், குமரன் நகர், மூர்த்தி நகர், சர்ச் சாலை, அடையாளம்பட்டு, S & P பொன்னியம்மன் நகர், கோயம்பேடு மார்க்கெட், மதுரவாயல், முகப்பேர் கிழக்கு, புழல், ஆர்.வி. நகர், டி,ஐ. சைக்கிள், அண்ணா நகர் மேற்கு ஆகிய இடங்களின் ஒரு பகுதி, சென்னை மத்திய மின் பகிர்மான வட்டத்திற்குட்பட்ட அண்ணா சாலை, கிரிம்ஸ் ரோடு, நுங்கம்பாக்கம், ஸ்பென்சர் பிளாசா, பூக்கடை, சிந்தாதிரிப்பேட்டை, லஸ், ராயப்பேட்டை, மேற்கு மாம்பலம் மற்றும் தலைமைச் செயலகம் ஆகிய பகுதிகளில் மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.
இதேபோலம், சென்னை வடக்கு மின் பகிர்மான வட்டத்திற்குட்பட்ட பேப்பர் மில்ஸ் ரோடு, கொருக்குப்பேட்டை, திருவொற்றியூர், CMBTT, ICF, இந்தியா பிஸ்டன், கீழ்பாக்கம், மணலி, நியூகொளத்தூர், பெரியார் நகர் ஆகிய இடங்களின் ஒரு பகுதிகளிலும், சென்னை தெற்கு - I மின் பகிர்மான வட்டத்திற்குட்பட்ட ஆழ்வார் திருநகர், கிண்டி, இராமாபுரம், இராமசாமி சாலை, செயின்ட் தாமஸ் மவுண்ட், வடபழனி, கெருகம்பாக்கம், போரூர் ஒரு பகுதி மற்றும் சென்னை தெற்கு - II மின் பகிர்மான வட்டத்திற்குட்பட்ட பெசன்ட் நகர், அடையாறு, வேளச்சேரி, திருவான்மியூர், கொட்டிவாக்கம், கடப்பேரி ஆகியவற்றின் ஒரு பகுதிகளுக்கு சீரான மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.
மின் விநியோகம் செய்வதில் உள்ள பிரச்னை: மழைநீர் சூழ்ந்துள்ள காரணத்தால், 230 கி.வோ. KITS பார்க் துணை மின் நிலையம், 110 கி.வோ. பெரும்பாக்கம் துணை மின் நிலையம், TNSCB மற்றும் மணலி துணை மின் நிலையங்களின் இயக்கம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.