தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"16ஆம் தேதி முதல் வெள்ள நிவாரண டோக்கன்" - தங்கம் தென்னரசு தகவல் - today latest news in tamil

chennai flood relief fund token: 16ஆம் தேதி முதல் சென்னை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத் தொகை வழங்குவதற்கான டோக்கன்கள் வழங்கப்பட உள்ளது என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

chennai flood relief fund token
சென்னை வெள்ள நிவாரணத் தொகை வழங்குவதற்கான டோக்கன்கள் 16ஆம் தேதி முதல் வழங்கப்படும் - தங்கம் தென்னரசு தகவல்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 11, 2023, 7:01 PM IST

Updated : Dec 11, 2023, 8:44 PM IST

சென்னை: மிக்ஜாம் புயல் நிவாரணம் தொடர்பாகத் தமிழக மனிதவள மேலாண்மைத் துறை மற்றும் நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று (டிச 11) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "அரசியல் உள்நோக்கத்துடன் எதிர்க்கட்சிகள் அவதூறு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இருந்தபோதும், மிக்ஜாம் புயல் காரணமாகச் சென்னையில் ஏற்பட்ட மழை வெள்ள நிவாரணமாகத் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

அதன் ஒருபகுதியாக மிக்ஜாம் புயலால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூபாய் 6 ஆயிரம் நிவாரணத் தொகையாக வழங்கத் தமிழக அரசு முடிவு செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசாணை வெளியிட்டு உள்ளார். அதன்படி வருகின்ற 16ஆம் தேதி முதல் சென்னை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத் தொகை வழங்குவதற்கான டோக்கன்கள் வழங்கப்பட உள்ளது.

மேலும் செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டக்கங்களை பொறுத்தவரையில் பாதிக்கப்பட்ட இடங்களைச் சேர்ந்த பொதுமக்கள் அனைவருக்கும் நிவாரண தொகை வழங்கப்படும். பல்வேறு துறைகளின் சார்பாக முதற்கட்டமாகப் பாதிப்பின் மதிப்பைக் கணக்கிட்டு 5,060 கோடி ரூபாய் கேட்டுள்ளோம். ஒற்றை இலக்கத்தில்தான் தற்போது உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.

இதுமட்டும் இல்லாமல் மத்திய அரசின் ஆய்வுக் குழுவிடம் வெள்ள நிவாரண நிதி குறித்து கோரிக்கைகள் முன்வைக்கப்பட உள்ளது. மத்திய அரசு நிதி ஒதுக்குமாறு பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உரிய முறையில் நீர் திறந்துவிடப்பட்டதால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் உட்பட அனைத்து அமைச்சர்களும் தொடர்ந்து மழை மீட்புப்பணியில் நேரடியாக ஈடுபட்டு வருகின்றனர். புயல் பேரிடரை எதிர்கொண்டதில் தமிழக அரசு முன்னோடி மாநிலமாக உள்ளது" என்று தெரிவித்தார்.

மேலும் தொடர்ந்து பேசிய அவர், "அதிமுக ஆட்சியில் ஜெயலலிதா படத்துடன் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்ட நிலையில் தற்போது எந்த படமும் இன்றி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு நிவாரண பொருட்கள் உடனுக்குடன் வழங்கப்பட்டது.

2015 பேரிடரை, தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதினார். சென்னைக்கு உதவ அமெரிக்கா போன்ற நாடுகள்தான் வர வேண்டி இருந்தது. அப்போது நிவாரண உதவிகளின்போது எந்த ஒருங்கிணைப்பும் இல்லை என்று உயர்நீதிமன்றமே சுட்டிக்காட்டியது.

ஆனால் தற்போது மண்டல வாரியாக ஆட்சி பணியாளர்கள் நியமிக்கப்பட்டதுடன், கால்வாய்கள் அனைத்தும் முறையாகத் தூர்வாரப்பட்டு , முன்னதாகவே அரசு பொது விடுமுறையை அறிவித்தது.

2015 வெள்ளத்தின் போது அப்போதைய அரசு ரூ.5000 நிவாரணத் தொகையாக அறிவித்தது. ஆனால் தற்போது ரூ.6000 நிவாரணத் தொகையாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள நிவாரணத் தொகையை வங்கியில் நேரடியாக வழங்கும்போது கடன் வாங்கிய பொதுமக்களின் வங்கிகளில் அந்த தொகையை பிடித்தம் செய்கின்றனர். அதனால்தான் நிவாரணத் தொகையை வங்கிகளில் செலுத்தாமல் நியாயவிலைக்கடைகளின் மூலமாக வழங்கப்படுகிறது.

இதையும் படிங்க:வெள்ள நிவாரணத் தொகையை வங்கிக் கணக்கில் செலுத்தக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு..!

Last Updated : Dec 11, 2023, 8:44 PM IST

ABOUT THE AUTHOR

...view details