தனியார் மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சை பெறுவதற்கான முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத் தொகையை உயர்த்தி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. கரோனா தொற்றுக்கு சிகிச்சையளிக்க தனியார் மருத்துவமனைகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாகத் தொடர்ந்து மக்கள் குற்றம் சாட்டி வந்தனர். கட்டணத்தை முறைப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொது மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதனையடுத்து தனியார் மருத்துவமனைகள் எந்தெந்த சிகிச்சைக்கு, எவ்வளவு கட்டணம் வசூலிக்க வேண்டும் என அரசு திருத்தப்பட்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. ஆனால், தனியார் மருத்துவமனைகள் தொடர்ந்து அதிக கட்டணமே வசூலித்து வருகின்றன என்ற குற்றச்சாட்டு எழுந்த வண்ணமே உள்ளது.
தற்போது இது தொடர்பாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், 'தமிழ்நாட்டில் தற்போது கோவிட்-19 தொற்று நோய் சிகிச்சைக்காக அரசு, தனியார் மருத்துவமனைகளின் அங்கீகரிக்கப்பட்ட பட்டியலினை வெளியிட்டுள்ளது. மேலும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் எளிதில் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ், திருத்தப்பட்ட வழிமுறைகளை அரசு வழங்கி உள்ளது.
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்றுவரும் பொது மக்களின் நலன் கருதி, சிகிச்சைக்கான மருத்துவமனை கட்டணத்தை தமிழ்நாடு அரசே காப்பீட்டுத் திட்டத்தின்கீழ், ஏற்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
இதன்படி அனைத்து வகையான கரோனா நோய் சிகிச்சை செலவுகளையும் தனியார் மருத்துவமனைகளுக்கு அரசு மீண்டும் வழங்கும். மேலும் அதி தீவிர, தீவிர, தீவிரமில்லாத தொற்றுள்ள அனைத்து கோவிட்-19 நோயாளிகளுக்கும் தனியார் மருத்துவமனைகளில் பரிசோதனை, சிகிச்சைக்கு ஆகும் செலவுகள் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத்திட்டத்தின்கீழ் முழுமையாக ஏற்றுக்கொள்ளப்படும். தனியார் மருத்துவமனையில் தீவிரமில்லாத கோவிட்-19 சிகிச்சை பெறுவதற்கு நோயாளிகள் நேரடியாக உள்நோயாளியாக அனுமதிக்கப்படலாம்.