சென்னை: மூதறிஞர் ராஜாஜியின் 50-வது ஆண்டு நினைவு சிறப்பு புகைப்படக் கண்காட்சி தமிழ்நாடு செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த புகைப்படக் கண்காட்சியை அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், தா.மோ.அன்பரசன், சென்னை மேயர் பிரியா உள்ளிட்டோர் இன்று (டிச. 25) தொடங்கி வைத்தனர்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், ஒன்றிய அரசின் அறிவுறுத்தலுக்கு முன்னதாகவே இந்தியாவில் முதல்முறையாக சீனா, ஜப்பான், தென்கொரியா, அமெரிக்கா, தைவான், ஹாங்காங் போன்ற 10-க்கும் மேற்பட்ட நாடுகளில் கரோனா தொற்று அதிகரித்தது. இந்த சூழ்நிலையில், தமிழ்நாட்டில் கரோனா தொற்று பரவாமல் தடுப்பதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனைத்துத்துறையின் அலுவலர்கள் கூட்டத்தை நடத்தினார். அப்போது ஆக்ஸிஜன் கையிருப்பு உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டு தேவையான நடவடிக்கைகள் எடுக்கவும் அறிவுறுத்தினார்.
நேற்றைக்கு முன்தினம் ஒன்றிய அரசின் சுகாதாரத்துறை அமைச்சர், அனைத்து மாநிலங்களின் அமைச்சர்கள் கூட்டத்தை நடத்தினார். அதில் கலந்துகொண்டோம். தமிழ்நாட்டில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக எடுத்துக் கூறினோம் என்றார்.
தமிழ்நாட்டில் 24 ஆம் தேதி முதல் பன்னாட்டு விமான நிலையங்களுக்கு வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு 2 சதவீதம் ரேண்டம் பரிசோதனை நேற்று தொடங்கப்பட்டுள்ளது. சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சிராப்பள்ளி ஆகிய விமான நிலையங்களில் பரிசோதனை தொடங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஒன்றிய அமைச்சரின் ட்விட்டரில், சீனா, ஜப்பான், ஹாங்காங், தைவான் போன்ற நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு 100 சதவீதம் ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
இதற்கான அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக துறைக்கு வரவில்லை என்றாலும், ஒன்றிய அமைச்சரின் சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ள தகவலை தொடர்ந்து இன்று முதல் 100 சதவீதம் ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்ய உத்தரவிட்டுள்ளோம். சீனா, ஜப்பான், ஹாங்காங், தைவான் ஆகிய நாடுகளில் இருந்து நேரடியாக வராமல், வேறு நாட்டிற்கு சென்று வந்தாலும், அந்த பயணிகளையும் 100 சதவீதம் ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்ய உத்தரவிட்டுள்ளோம் என கூறினார்.