சென்னை: போக்குவரத்து ஊழியர்களின் ஊதிய உயர்வு குறித்து பேச்சுவார்த்தையை நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அனைத்து தொழிற்சங்கத்தினர் பொங்கல் பண்டிகைக்கு முன்னர் வேலைநிறுத்த போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர். இது தொடர்பாக, போக்குவரத்து துறை மேலாண்மை இயக்குநர்களிடம் கடிதம் வழங்கி உள்ளனர்.
இந்நிலையில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டத்தை கைவிட வேண்டியும், பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தும் இன்று (ஜன.3) அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், "அனைத்து போக்குவத்து தொழிற்சங்கங்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள். தமிழ்நாடு போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் ஓய்வு பெற்ற தொழிலாளர்களின் பல்வேறு பிரச்னைகள் தீர்க்கப்பட வேண்டும் என தொழிற்சங்கங்கள் தொடர்ந்து அரசை வலியுறுத்தி வருகின்றன.
கடந்த அதிமுக ஆட்சி, தமது காலத்தில் பதினான்காவது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை உரிய காலத்தில் முடிக்காமல் தொழிலாளர்களை நிர்கதியாக நிற்க வைத்தது, எந்த கோரிக்கைகளும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு தான், ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை தொழிற்சங்கங்களின் முக்கிய கோரிக்கைகளை ஏற்று கொண்டு வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது. மிக முக்கியமாக, அதிமுக ஆட்சி காலத்தில் சீர்குலைக்கப்பட்ட ஊதிய விகிதம், மீண்டும் சீரமைக்கப்பட்டு "பே மேட்ரிஸ்", தனித்தனி ஊதிய விகிதம், 2.57 காரணி வழங்கப்படுகிறது.
ஊதியமும் 5 சதவிகிதம் அளவிற்கு உயர்த்தப்பட்டது. இது அத்தனையும் எந்த போராட்டமும் நடத்தாமல், எந்த ஒடுக்கு முறையையும் சந்திக்காமல் கிடைத்தவை. கடந்த ஆட்சி காலத்தில் போக்குவரத்து துறை எவ்வளவு சீரழிக்கப்பட்டது என்பது எல்லோரும் அறிந்தது. மகளிர் கட்டணமில்லா பயணத்திற்கு இந்த ஆண்டு மட்டும் 2 ஆயிரத்து 800 கோடி ரூபாய் ஒதுக்கி, டீசல் மானியமாக ரூபாய் 2 ஆயிரம் கோடியும், மாணவர் இலவச பஸ் பயணத்திற்காக ரூபாய் ஆயிரத்து 500 கோடியும் ஒதுக்கீடு செய்தவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
அரசாணை 36-ஐ பிறப்பித்து, போக்குவரத்துக் கழகங்களின் வரவுக்கும், செலவுக்குமான பிரச்னைகளுக்கு தீர்வு காண அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் மூலம் போக்குவரத்து கழகங்கள் சிறப்பாக செயல்பட காரணமானவர் முதலமைச்சர். புதிய பேருந்துகள் வாங்க நிதி ஒதுக்கி, புதிய பணியாளர்கள் நியமனத்திற்கு அனுமதி அளித்து துறை சிறப்பாக செயல்பட நடவடிக்கை எடுத்துள்ளவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.