சென்னை, கோவை மாநகராட்சிகளின் உள்கட்டமைப்பு பணிகளுக்கு கோரப்பட்ட டெண்டரில் முறைகேடுகள் நடந்திருப்பதாகவும், அமைச்சர் வேலுமணி தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி, உறவினர்களுக்கு ஒப்பந்தம் வழங்கியதால் அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாகவும், இதுகுறித்து நீதிமன்ற கண்காணிப்பில் சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்து விசாரிக்க உத்தரவிடக்கோரியும் அறப்போர் இயக்கம், திமுக எம்.பி. ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்குகள் ஏற்கனவே நீதிபதி சத்தியநாராயணன், சேஷசாயி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் ஆஜரான தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், 'முறைகேடு புகாரில் 349 டெண்டர்கள் குறித்த ஆரம்ப கட்ட விசாரணையில், 41 நிறுவன ஆவணங்களின் விசாரணை முடிந்து விட்டதாகவும், வழக்கில் 250 சாட்சிகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது' எனத் தெரிவித்தார்.