நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகள் சார்பாக மேற்கொள்ளப்பட்டுவரும் கரோனா வைரஸ் நோய் தடுப்புப் பணிகள், பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மாநில அளவிலான ஆலோசனைக் கூட்டம் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.
ஆய்வுக்கூட்டத்தின்போது அமைச்சர் எஸ்.பி. வேலுமணி அரசு அலுவலர்களுக்கு அறிவுறுத்தியதாவது:
- ஊழியர்களுக்குப் பாதுகாப்புக் கவசங்கள் முழுமையாக வழங்கவும், கிருமிநாசினிகள் இரண்டு மாத இருப்பை உறுதிசெய்ய வேண்டும்.
- அம்மா உணவகம், சமுதாய சமையல் அறைகளுக்கு ஒரு அலுவலரைப் பொறுப்பாக்கி, செயல்முறை ஆணைகள் வெளியிட்டு, அவர்களின் தொலைபேசி எண்கள் விளம்பரம் செய்து மூன்று வேளையும் கண்காணித்திட வேண்டும்.
- தினசரி காய்கறிச் சந்தைகளில் செயல்பாடு, தள்ளுவண்டிகள் தெருக்களில் நியாயவிலையில் விற்பதை உறுதிசெய்ய வேண்டும்.
- நோய்த்தொற்று உள்ளவர்களின் வீடுகளில் தனியே குப்பை சேகரித்திடவும், அனைத்து தூய்மைப் பணியாளர்கள், பாதாளச் சாக்கடைப் பணியில் ஈடுபடுவோருக்கு கையுறை, காலுறை, முகக்கவசம் போன்றவை அணிந்து செயல்படுகிறார்களா என்பதை அலுவலர்கள் உறுதிசெய்ய வேண்டும்.
- தூய்மைப் பணியாளர்கள் அடிக்கடி கைகழுவ போதிய சோப்புகளை உள்ளாட்சி அலுவலர்கள் வழங்க வேண்டும்.
- அனைத்து நிவாரண உதவிகளும் பயனாளிகளுக்கு உடனடியாகச் சென்றடைவதை உறுதிசெய்ய வேண்டும்.