சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று(மார்ச்.27) தமிழ்நாடு போக்குவரத்துத் துறை சார்பில், அரசு போக்குவரத்துக் கழக விருப்ப ஓய்வு பெற்றவர்கள் மற்றும் இறந்த பணியாளர்களுக்கான ஓய்வு கால பணப்பலன்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் கலந்து கொண்டு, 23 பேருக்கு காசோலைகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் போக்குவரத்துத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் கோபால், அனைத்து போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர்கள் உள்ளிட்டப் பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் சிவசங்கர், "தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் கடந்த 2020ஆம் ஆண்டு மே மாதம் முதல் 2021ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை பணிபுரிந்து விருப்ப ஓய்வுபெற்ற மற்றும் இறந்த பணியாளர்கள் என 1,242 நபர்களுக்கு வருங்கால வைப்பு நிதி பணிக்கொடை, விடுப்பு ஒப்படைப்பு தொகை மற்றும் ஓய்வூதிய ஒப்படைப்பு தொகை உள்ளிட்ட பணப்பலன்கள் 242.67 கோடி ரூபாயில் வழங்கப்பட்டுள்ளது.
அதேபோல், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் கடந்த 2020ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் 2022ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை பணிபுரிந்து விருப்ப ஓய்வுபெற்ற மற்றும் இறந்த பணியாளர்கள் என மொத்தம் 1,626 நபர்களுக்கு வருங்கால வைப்பு நிதி, பணிக்கொடை, விடுப்பு ஒப்படைப்பு தொகை, ஓய்வூதிய ஒப்படைப்புத் தொகை உள்ளிட்ட பணப் பலன்களான 308.45 கோடி ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களைச் சார்ந்த 23 ஓய்வுபெற்ற மற்றும் இறந்த பணியாளர்களின் வருங்கால வைப்பு நிதி, பணிக்கொடை, விடுப்பு ஒப்படைப்பு தொகை மற்றும் ஓய்வூதிய ஒப்படைப்பு தொகை உள்ளிட்ட பணப்பலன்களுக்குரிய காசோலைகளை தற்போது வழங்கி உள்ளோம். அதேபோல் மீதமுள்ள 1,603 பணியாளர்களுக்கும் அந்த போக்குவரத்துக் கழக நிர்வாகத்தின் வாயிலாக காசோலைகள் வழங்கப்படும்.