சென்னை:தீபாவளிக்குச் சிறப்புப் பேருந்துகள் இயக்குவது தொடர்பாகச் சென்னை தலைமைச் செயலகத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, "அடுத்த மாதம் 12ஆம் தேதி நாடு முழுவதும் தீபாவளி பண்டிகளைக் கோலாகலமாக கொண்டாடப்படவுள்ளது.
எல்லா வருடமும் சென்னையிலிருந்து மக்கள் தங்களுடைய சொந்த ஊர்களுக்குச் செல்ல போக்குவரத்துத் துறை சார்பாகச் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும். இந்த வருடமும் நவம்பர் 9, 10 மற்றும் 11 ஆகிய மூன்று நாட்களுக்குச் சென்னையிலுள்ள 5 இடங்களிலிருந்து தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மாவட்டத்திற்கும் 10,975 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
மேலும், வெளியூர்களுக்குத் தினசரி இயக்கப்படும் பேருந்துகளோடு சேர்த்து ஒட்டுமொத்தமாக 16,895 பேருந்துகள் தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்டங்களுக்கு இயக்கவும், தீபாவளி முடிந்து மக்கள் திரும்பி வர ஏதுவாக 13, 14 மற்றும் 15 ஆகிய தேதிகளிலும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளது.
இதனால், கடந்த ஆண்டை போல மக்களுக்கு எந்தவித குறைபாடும் இல்லாமல் சொந்த ஊர்களுக்குச் சென்று வர இந்த ஆண்டும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தீபாவளிக்கு மக்கள் எளிதாகப் பயணிக்க முன்பதிவு மையங்கள் ஏற்கனவே துவங்கப்பட்டுள்ளன. அதன்படி, கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 10 முன்பதிவு மையங்களும், தாம்பரம் மெப்ஸ் பேருந்து நிலையத்தில் 1 முன்பதிவு மையமும், மேலும் பொதுமக்கள் இணையவழியாக முன்பதிவு செய்யவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
இதுவரை, தீபாவளி பண்டிகைக்குச் சொந்த ஊர்களுக்குச் செல்வதற்காக 16,000 பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர். மேலும், இதற்கு முன்பு கூட கடந்த வாரங்களில் தொடர் விடுமுறை இருந்த போது மக்களுக்குத் தங்கு தடையின்றி பேருந்து சேவையை வழங்கத் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துத் துறை சார்பாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இந்த தீபாவளி பண்டிகைக்குச் சிறப்புப் பேருந்துகள் குறித்த புகார்கள் ஏதும் இருப்பின் அதனைப் பொதுமக்கள் தெரிவிக்க 24 மணி நேரமும் செயல்படக் கூடிய இலவச தொடர்பு எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. 9445014450 மற்றும் 9445014436 ஆகிய இரண்டு எண்களும் செயல்படும். இது போன்ற பண்டிகை நாட்களைப் பயன்படுத்தி ஆம்னி பேருந்துகள் அதிக கட்டணம் வசூலித்தால் அது குறித்த புகார்களை வழங்க 1800 425 6151 ஆகிய எண்ணின் மூலமாகவும், மேலும் 044-2474902, 26280445 , 26281611 ஆகிய எண்களின் மூலமாகவும் தொடர்பு கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது மட்டுமில்லாமல் 24 மணி நேரமும் புகார்களைக் கண்காணிக்கச் சிறப்புப் புகார் அறை ஒன்று கோயம்பேடு பேருந்து நிலையத்தில் செயல்படும். மேலும், பொதுமக்கள் சிறப்புப் பேருந்துகளைப் பயன்படுத்த கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு வருவதற்கு இணைப்பு பேருந்துகளும் இயக்கப்படவுள்ளது. குறிப்பாக கார் மற்றும் ஆம்னி பேருந்துகள் ஆகியவை போக்குவரத்து நெரிசலைத் தவிர்ப்பதற்காக எந்த வழியாக இயக்கப்பட வேண்டும் என்ற அறிவுறுத்தலும் வழங்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க:சென்னை விமான நிலையத்தில் திருப்பதி லட்டு, லுங்கிக்கு கெடுபிடி.. சுங்கத்துறையினரின் கட்டுப்பாடுகளால் பயணிகள் அதிருப்தி!