சென்னை :பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துத் துறை சார்பில் சென்னையிலிருந்து வெளியூர்களுக்குச் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகிறது. ஜன.12 தேதி முதல் ஜன.14 வரை சென்னையிலிருந்து தினசரி இயக்கக் கூடிய 2 ஆயிரத்து 100 பேருந்துகளுடன், 4 ஆயிரத்து 706 சிறப்புப் பேருந்துகள் என மூன்று நாட்களுக்கு ஒட்டு மொத்தமாக 11 ஆயிரத்து 6 பேருந்துகள் இயக்கப்படுகிறது.
மேலும் பிற ஊர்களிலிருந்தும் மேற்கண்ட மூன்று நாட்களுக்கு, 8 ஆயிரத்து 478 சிறப்புப் பேருந்துகள் என மொத்தமாக 19 ஆயிரத்து 484 பேருந்துகள் இயக்கப்படுகிறது என தமிழ்நாடு போக்குவரத்துத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பொங்கல் பண்டிகை முடிந்து சென்னை திரும்புவதற்கு, ஜனவரி 16 முதல் 18ஆம் தேதி வரை தினசரி இயக்கக் கூடிய 4,830 சிறப்புப் பேருந்துகள் என மொத்தம் 17,589 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
குறிப்பாக மக்கள் கூட்ட நெரிசலைத் தவிர்க்கச் சென்னையில் ஆறு இடங்களிலிருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகிறது. மேலும் ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிறப்புப் பேருந்துகள் இயக்கத்தினை, போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் ஆய்வு மேற்கொண்டார். மாதவரம் மற்றும் பூந்தமல்லி பைபாஸ் பேருந்து நிலையத்தில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் சிவசங்கர்,பேருந்தினை இயக்கும் ஓட்டுநர், நடத்துநர்களிடம் பேருந்தினை மிகவும் கவனமுடன் இயக்கி பயணிகளின் பாதுகாப்பினை உறுதி செய்திட வேண்டும் என அறிவுறுத்தினார்.