சென்னை தலைமைச் செயலகத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர், ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூல் செய்வதைத் தடுக்க சட்ட ரீதியாக நடவடிக்கை மேற்கொள்வது தொடர்பாக போக்குவரத்துத்துறை ஆணையர்களிடம் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.
தொடர்ந்து செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அமைச்சர் சிவசங்கர், “ஆகஸ்ட் 12ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை தொடர் விடுமுறைகள் இருந்ததையடுத்து ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டதாகப் புகார் வந்தது.
இதனைத்தொடர்ந்து போக்குவரத்துத்துறை ஆணையர்கள் தலைமையில் பல குழுக்கள் அமைக்கப்பட்டு 953 பேருந்துகளில் சோதனை மேற்கொண்டு, கூடுதலாக கட்டணம் வசூல் எனப் புகார் தெரிவித்த 97 பேரிடம் பெறப்பட்ட கூடுதல் கட்டணம் 68ஆயிரத்து 800 ரூபாய் திருப்பி கொடுக்கப்பட்டது.
மேலும், கிருஷ்ணஜெயந்தி உள்ளிட்ட தொடர் விடுமுறை காரணமாக, நேற்று மாலை முதல் கூடுதல் கட்டணம் வசூலிப்பதைத்தடுக்கப் பல்வேறு குழுக்கள் ஆய்வுமேற்கொண்டனர். ஆம்னி பேருந்துகளை வாடகைக்கு எடுத்துக்கூடுதலாக கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அதிக கட்டணம் வசூலித்த உரிமம் இல்லாத நான்கு ஆம்னி பேருந்துகளுக்கு 11 லட்சத்து 4 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆம்னி என்னும் பெயர்களில் கட்டண உயர்வைத் தடுக்கும் வகையில், போக்குவரத்து ஆணையர்களிடம் ஆய்வுக்கூட்டங்கள் மேற்கொள்ளப்படும். தொடர்ந்து ஆம்னி பேருந்து உரிமையாளர்களுடனும் கலந்து பேசி, ஆம்னி பேருந்துகளில் கட்டண உயர்வைத் தடுக்கும் வகையில் சட்டரீதியாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் சிவசங்கர் ஆட்டோவுக்கான புதிய கட்டண நிர்ணயம் விரைவில் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும். தீபாவளி, பொங்கல் ஆகிய விழாக்களில் கூடுதல் அரசுப்பேருந்து விடப்பட்டுள்ளது. 500 பேருந்துகள் வாங்க திட்டமிடப்பட்டுள்ள நிலையில் முதல் கட்டமாக 100 மின்னணு பேருந்துகளை வாங்குவதற்காக டெண்டர்கள் விடுவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது’ எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:இனிமேல் வளையோசை... பாட்டு கமல் மாதிரி பண்ண முடியாது... அரசின் புதிய விதிமுறைகள் என்னென்ன...?