சென்னை:வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து இந்து சமய அறநிலையத்துறை, காவல்துறை, பெருநகர சென்னை மாநகராட்சி, மக்கள் நல்வாழ்வுத்துறை, மின்சார வாரியம், சென்னை குடிநீர் வாரியம், தீயணைப்புத்துறை உள்ளிட்ட துறை அலுவலர்களுடன் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டு அலுவலர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வைணவ கோயில்களிலும் வரும் 23ஆம் தேதி வைகுண்ட ஏகாதசி கொண்டாடப்படவுள்ளது. கடந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசிக்குத் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சொர்க்கவாசல் வழியாக சாமி தரிசனம் செய்தனர். இந்தாண்டு கூடுதலாக 20 சதவீத பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முதியோர்களுக்குத் தனி வரிசை: அந்த வகையில் இந்தாண்டு வைகுண்ட ஏகாதசிக்குச் செய்ய வேண்டிய முன்னேற்பாடு பணிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள், பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் போன்றவற்றைச் செய்து தருவதற்காக ஆலோசனை மற்றும் ஆய்வு மேற்கொண்டோம்.
வைகுண்ட ஏகாதசி அன்று கோயிலுக்குக் கிழக்கு கோபுர வாசல் வழியாக பொது தரிசனமும், மேற்கு கோபுர வாசல் வழியாகச் சொர்க்க வாசல் சேவைக்கு வருபவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் 70 வயது நிரம்பிய முதியோர்களும் அனுமதிக்கப்படுவர். டி.பி கோயில் தெரு வழியாக மாற்றுத்திறனாளிகள் மற்றும் 70 வயது நிரம்பிய முதியோர்களுக்குத் தனி வரிசை இந்தாண்டு புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ளது.
சிறப்புத் தரிசனக் கட்டணம் ரத்து: சொர்க்க வாசல் திறப்புக்கு அதிகாலை இரண்டரை மணிக்கு ஆயிரத்து 500 பக்தர்கள் அனுமதிப்பதென்றும், உபயதாரர்கள், கட்டளை தாரர்கள் 850 நபர்கள் அனுமதிப்பது எனவும் முடிவு எடுக்கப்பட்டு இருக்கின்றது. அதன் பிறகு காலை ஆறு மணி முதல் இரவு நடை மூடுகின்ற வரையில் பொது தரிசனம் தான் என இந்த ஆண்டு கடைப்பிடிக்கப்பட உள்ளது. அன்றைய தினம் சிறப்புத் தரிசனக் கட்டணம் முழுமையாக ரத்து செய்யப்படுகின்றது.
பாதுகாப்புப் பணி:கோயிலில் கூடுகின்ற பக்தர்களுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்படுமாயின், அவர்களுக்கு உரியச் சிகிச்சை அளிப்பதற்காகக் கோயிலுக்கு உள்ளேயும், வெளியிலும் 6 சிறப்பு மருத்துவ முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கின்றன. பக்தர்களுக்குப் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதி மற்றும் தற்காலிக கழிவறைகள் 20 இடங்களில் ஏற்பாடு செய்யப்பட இருக்கின்றது. காவல்துறையின் சார்பில் 2 துணை ஆணையர்கள் தலைமையில் 3 ஷிப்ட்களாக, 18 உதவி ஆணையர்கள், 54 காவல் ஆய்வாளர்கள், 400க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
தயார் நிலையில் தீயணைப்பு வாகனங்கள் மற்றும் அவசரக் கால ஊர்திகள் நிறுத்தப்பட இருக்கின்றன. இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 2 கூடுதல் ஆணையர்கள், 6 இணை ஆணையர்கள், 4 துணை ஆணையர்கள், 6 உதவி ஆணையர்கள், செயல் அலுவலர்கள் என 150 அலுவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்படுவர்.