சென்னை: ஓட்டேரி பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவரது மகன் சதீஷ் குமாரும், அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபுவின் மகள் ஜெயகல்யாணி ஆகியோரும் காதலித்து வந்த நிலையில், கடந்த 8 மாதங்களுக்கு முன் வீட்டைவிட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர்.
இந்த விவகாரம் சர்ச்சையான நிலையில், இன்று காலை சதீஷ் குமாரின் சகோதரியான சங்கீதா என்பவரை ஓட்டேரி போலீசார் கைது செய்து எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.
சூளைமேடு பகுதியைச் சேர்ந்த சுந்தர் என்பவர் ஓட்டேரி பகுதியில் மருந்துக் கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த சங்கீதாவிடம் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு 2 லட்ச ரூபாய் ஏலச்சீட்டு போட்டுள்ளார். 2 லட்ச ரூபாய் சீட்டை எடுத்துவிட்டு, அதன் பின்பு சுந்தர் சீட்டு கட்டாமல் 36,000 ரூபாய் பாக்கி வைத்துள்ளார்.
இதனால் சங்கீதா மருந்துக் கடைக்குச் சென்று சுந்தரிடம் பணத்தைக் கேட்டு ஆபாசமாக திட்டி வந்ததாகக் கூறப்படுகிறது. கடந்த 9ஆம் தேதி சங்கீதா மற்றும் அவரது கணவர் ஹரி மீண்டும் சென்று சுந்தரிடம் இருந்த 2000 ரூபாய் பணத்தைப் பறித்துவிட்டு மீதமுள்ள பணத்தைக் கேட்டு கட்டையால் தாக்கிவிட்டுச் சென்றதாகக் கூறப்படுகிறது. காயமடைந்த சுந்தர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, ஓட்டேரி போலீசாரிடம் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் ஆபாசமாக பேசுதல், மிரட்டல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சங்கீதாவை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள சங்கீதாவின் கணவர் ஹரியை தேடி வருகின்றனர்.