சென்னை:நுங்கம்பாக்கம் உள்ள இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் நேற்று (ஆக. 31) இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தலைமையில் திருக்கோயில்களில் நடைபெற்று வரும் மேம்பாட்டுப் பணிகள் குறித்தும், சட்டப்பேரவை அறிவிப்புகளின்படி நிறைவேற்றப்பட்டு வரும் பணிகளின் முன்னேற்றம் குறித்தும் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் அமைச்சர், 2021–22 மற்றும் 2022–23ஆம் ஆண்டிற்கான சட்டமன்ற மானியக் கோரிக்கை அறிவிப்புகளின்படி சோளிங்கர் லட்சுமி நரசிம்மசுவாமி திருக்கோயிலில் அமைக்கப்பட்டு வரும் கம்பிவட ஊர்தி (ரோப் கார்) மற்றும் அடிப்படை கட்டமைப்பு பணிகள், மனநலக் காப்பகம் அமைக்கும் பணிகள், சின்னமலை அருள்மிகு யோக ஆஞ்சநேயர் திருக்கோயில் திருப்பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நிர்வாக பயிற்சி மையம், திருமண மண்டபம் கட்டுமானப் பணிகள், ராஜகோபுரத்தை தேர்வீதியுடன் இணைக்கும் பணிகள், பக்தர்களுக்கு தேவை1யான அடிப்படை வசதிகளான குடிநீர், கழிவறை உள்ளிட்ட வசதிகளை மேம்படுத்தும் பணிகள், மழைநீர் வடிகால் பணிகள், அன்னதானத் திட்ட செயல்பாடுகள் உள்ளிட்ட பணிகள் குறித்தும் ஆலோசனை நடைபெற்றது.