சென்னை:தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இன்று (மே 5) கேள்வி நேரத்தின் போது சட்டப்பேரவை உறுப்பினர் அம்மன் கே அர்ஜுனன், மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயில் உள்ளே வரும் பாம்பாட்டி சித்தர் திருக்கோயில் திருப்பணிகள் செய்ய வேண்டும் எனவும் கழிவு நீர் ஆலயத்தை சுற்றி வருவதால் துர்நாற்றம் வீசுகிறது, இதைச் சுத்தம் செய்ய நடவடிக்கை வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார்.
இதற்குப் பதிலளித்துப் பேசிய அமைச்சர் சேகர் பாபு, “பாம்பாட்டி சித்தர் ஆலயத்திற்கு கடந்த 2013ஆம் ஆண்டு திருப்பணிகள் நடைபெற்று, குடமுழுக்கு நடந்து முடிந்துள்ளது. அடுத்தாண்டு குடமுழுக்கு நடைபெற வேண்டி இருக்கும் என்றாலும் முன்கூட்டியே பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்த இடத்தில் ரம்மியமான சூழலை பக்தர்களுக்கு உருவாக்கி தருவோம்” எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “அந்த இடத்தை நேரில் ஆய்வு செய்துள்ளோம். இந்தாண்டு மானிய கோரிக்கை அறிவிப்புகளிலே ரூ.6.30 கோடி செலவில் திருப்பணிகள் அந்த ஆலயத்தில் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புத்தகத்தைப் புரட்டிப் பார்த்தால் தெரியும்” என நக்கலாக பதிலளித்தார். மேலும் கழிவுநீர் துர்நாற்றம் வீசுவதாக கூறியதற்கு, அதில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும், நாளைய தினம் பதில் தரப்படும் எனத் தெரிவித்தார்.