சென்னை:அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி, சட்டவிரோதக் காவலில் இருப்பதாக அவரின் மனைவி மேகலா தொடர்ந்த வழக்கு மூன்றாவது நீதிபதி சி.விகார்த்திகேயன் முன்பு இன்று (ஜூலை 12) இரண்டாவது நாளாக நடைபெற்று வருகிறது.
அமலாக்கத்துறை தரப்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதங்களைத் தொடங்கினார். அதில் அவர், 'சொத்துகளை முடக்கவும், சோதனை செய்யவும் அமலாக்கத் துறைக்கு அதிகாரம் உள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்றம் குறித்து விசாரணை செய்வதற்காகவே அமலாக்கத்துறை கொண்டு வரப்பட்டது.
செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்கவில்லை என்றாலும் புலன் விசாரணை செய்வதற்கு அமலாக்கத் துறைக்கு அதிகாரம் உள்ளது. பணம் கொடுத்து ஏமாந்ததாகவும், பணப்பரிமாற்றம் நடந்ததாகவும் பலர் புகார் கொடுத்ததன் அடிப்படையிலேயே அமலாக்கத் துறை விசாரணை நடைபெற்றுள்ளது.
ஆயிரக்கணக்கான மக்கள் பணத்தை இழந்து தவிக்கிறார்கள். எங்கள் கடமையை செய்ய விசாரணைக்கு அழைத்தால் செந்தில் பாலாஜி வர மறுக்கிறார். சம்மன் அனுப்பினாலும் வர மறுக்கிறார். அதனால் தான் கைது செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. கைது செய்ய எங்களுக்கு அதிகாரம் இருக்கிறதா? இல்லையா? என வாதிட விரும்பவில்லை. ஆனால் புலன் விசாரணை செய்ய எங்களுக்கு சட்டபடி முழு அதிகாரம் வழங்கப்பட்டு உள்ளது.
ஆவணங்களின் அடைப்படையிலேயே செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு உள்ளார். கைது செய்த பிறகும் காவலில் எடுத்து விசாரிக்க எங்களுக்கு அதிகாரம் உள்ளது. வங்கி மோசடி வழக்குகளில் 10 ஆயிரம் முதல் 19 ஆயிரம் கோடி ரூபாய் பணங்களை, சொத்துகளை முடக்கி வங்கிகளுக்கு கொடுத்து உள்ளோம்.