கடந்த அதிமுக ஆட்சியில் தமிழ்நாடு மின்மிகை மாநிலமாக இருந்தது என்றால் 2 லட்சத்து 42 ஆயிரம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு கொடுக்காதது ஏன்? என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டப்பேரவை கூட்டத் தொடரில் கேள்வி எழுப்பினார்.
அதற்கு, அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் ரவி, "கடந்த ஒரு மாதமாக தமிழ்நாட்டில் மின் தடை ஏற்பட்டு வருகிறது. திமுக ஆட்சி என்றாலே மின்தடை ஆட்சி என்ற நிலைதான் உள்ளது. மின் கட்டணம் வசூலிப்பதில் குளறுபடி உள்ளது" என குற்றஞ்சாட்டினார்.
இதற்கு பதில் அளித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, "மின் கட்டணம் வசூலிப்பதற்கு போதிய கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் எவ்விதமாக குளறுபடியும் இல்லை. தமிழ்நாட்டில் தற்போது ஏற்பட்டு வரும் மின்தடைக்கு காரணம் கடந்த 9 மாதங்களாக எவ்விதமான பராமரிப்பு பணிகளும் மேற்கொள்ளபடவில்லை. எனவே தடையில்லா மின்சாரம் வழங்க தான் தற்போது பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. வரும் 10 நாட்களுக்குள் மின்தடை சரிசெய்யப்படும்" என உறுதியளித்தார்.
எதிர்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில், "கடந்த ஒரு மாதமாக இந்த அரசு என்ன செய்தது. இந்த ஒரு மாதமாக தான் மின்தடை உள்ளது. அதிமுக ஆட்சியில் மின் தடை இல்லை" என்றார்.
இதற்கு அமைச்சர் செந்தில் பாலாஜி, "கடந்த ஆட்சியில் தமிழ்நாடு மின்மிகை மாநிலமாக இருந்தது என்று சொல்லிகொள்கிறார்கள். ஆனால் 2 லட்சத்து 42 ஆயிரம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு கொடுக்கவில்லை. மின் கட்டணத்தில் குளறுபடிகள் இருப்பதாக மக்கள் கூறியிருந்தனர். அதற்காக மூன்று வகையாக மின் கட்டணம் செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இதன் மூலம் 11 லட்சத்து 40 ஆயிரம் பேர் மின் கட்டணத்தை செலுத்தி உள்ளனர். அதிமுக ஆட்சி காலத்தில் 5 லட்சத்து 40 ஆயிரம் முறை மின் வெட்டு ஏற்பட்டுள்ளது. டிரான்ஸ் பார்மர் கோளாறின் காரணமாக 10 ஆயிரம் முறை மின் தடை ஏற்பட்டிருக்கிறது.