சென்னை:செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் அண்மையில் கள்ளச்சாராயம் குடித்த 20-க்கும் மேற்பட்டோர், பலியான சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனைத்தொடர்ந்து பலருக்கும் வாந்தி, மயக்கம், கண் எரிச்சல் ஏற்பட்ட நிலையில் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இச்சம்பவம் தொடர்பாக, போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில், தமிழ்நாட்டில் படிப்படியாக டாஸ்மாக் கடைகளையும் மூட வேண்டும் என பொதுமக்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், 'தமிழ்நாட்டில் 500 டாஸ்மாக் கடைகள் விரைவில் மூடப்படும் என்றும், இதற்கான அறிவிப்பு ஒருவாரத்தில் வெளியாகும்' என்றும் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். இது குறித்து தலைமைச் செயலகத்தில் இன்று (ஜூன் 5) செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், ”மூட வேண்டிய 500 டாஸ்மாக் கடைகளை இறுதி செய்யும் பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளதாகவும், இதற்கான பட்டியல் தயார் செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். மேலும், ஒரு வாரத்தில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும்' என்றும் அவர் கூறினார்.