சென்னை: தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலஜி தலைமையில், ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழக மேலாண்மை இயக்குநர் ராஜேஷ் லக்கானி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் அமைச்சர் செந்தில் பாலாஜி பேசினார். அப்போது, "கடந்த அதிமுக ஆட்சியில் குறைந்த மின் அழுத்த பிரச்னை தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மின்மாற்றிகள் பழுதடைந்து குறைந்த மின் அழுத்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதனை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த பணிகள் 3 அல்லது 4 மாதங்களுக்குள் சரி செய்யப்படும்" என தெரிவித்தார்.
தேர்தல் வாக்குறுதி
"தேர்தல் வாக்குறுதிகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்பட்டு வருகின்றன. மாதந்தோறும் மின் கணக்கீடு எடுக்கப்படும் என்கிற வாக்குறுதியும் நிறைவேற்றப்படும். மேலும் 3ல் ஒரு பங்கு மின்சாரத்தை கொள்முதல் செய்து வரும் நிலையில், நமக்கான உற்பத்தியை நாமே செய்து கொள்ள வேண்டும் என்கிற இலக்கை நோக்கி பயணித்து கொண்டிருக்கிறோம்".