சென்னை: கடந்த மே 26 ஆம் தேதி வருமானவரித்துறை அதிகாரிகள் கரூர் ராமகிருஷ்ணபுரத்தில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் வீட்டில் சோதனையிட சென்றபோது வருமானவரித்துறை அதிகாரிகளை திமுகவினர் முற்றுகையிட்டு கார் கண்ணாடியை உடைத்தனர்.
இதை தொடர்ந்து காவல் நிலையத்தில் புகார்கள் அளிக்கப்பட்டு 20 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். பின்னர், வருமானவரித்துறை சோதனை ஜூன் இரண்டாம் தேதி வரை 8 நாட்கள் தொடர்ந்து நடைபெற்றது. அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமான ஒப்பந்ததாரர்கள் மற்றும் அவரது சகோதரர் வீட்டில் வருமான வரித்துறையினர் மேற்கொண்ட சோதனையில் முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.
இதனை அடுத்து பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் சட்ட விரோத பண பரிவர்த்தனை ஏதும் நடைபெற்றுள்ளதா? என விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் (ஜூன் 13) செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் சோதனை செய்தனர்.
அமலாக்கத்துறை சோதனை: நேற்று (ஜூன் 13) காலை செந்தில் பாலாஜி வீடு அமைந்துள்ள மன்மங்கலம், கரூர் நகர் பகுதியில் அமைந்துள்ள ராமகிருஷ்ணபுரம், செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் வீடு, கரூர் வெங்கமேடு சண்முக செட்டியார் வீடு, கரூர் ராயனூரில் உள்ள கொங்கு மெஸ் சுப்பிரமணியன் வீடு உள்ளிட்ட 4 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் முதலில் சோதனையை துவக்கிய நிலையில், செந்தில் பாலாஜியின் உதவியாளர் வேலாயுதம்பாளையத்தில் உள்ள கார்த்திக் வீட்டில் சோதனை செய்தனர்.
இதன் பின்னர், குளித்தலை அருகே உள்ள லாலாபேட்டை ஆடிட்டர் திருநாவுக்கரசு அலுவலகம், கரூர் - ஈரோடு சாலையில் உள்ள ராமவிலாஸ் துணிக்கடை உரிமையாளர் ரமேஷ்பாபு, கரூர் கடை வீதியில் உள்ள பழனி முருகன் ஜுவல்லரி உரிமையாளர் வீடு மற்றும் கடை, கரூர் செங்குந்தபுரம் சாலையில் உள்ள ஆடிட்டர் சதீஷ்குமார் அலுவலகம் என 9 இடங்களில் சோதனை செய்தனர்.