சென்னை:தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று(ஏப்.26) மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறையின் மானியக் கோரிக்கை நடைபெற்றது. அதில் அமைச்சர் செந்தில் பாலாஜி துறையில் இதுவரை நடந்த சாதனைகளை வாசித்தார். அவை கீழே வருமாறு:
*2021-22 ஆம் ஆண்டில் 8.26 கோடி லிட்டர் தானியங்களை அடிப்படையாகக் கொண்ட சாராவி வெளி மாநிலங்களிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.
* தமிழ்நாட்டில் தற்போது 17 வடிபாலைகளில் எத்தனால் உற்பத்தி செய்யும் வசதி உள்ளது.
* தமிழ்நாட்டில் தற்போது 11 இந்திய தயாரிப்பு அயல்நாட்டு மதுபான உற்பத்தி நிறுவனங்கள், 7 பீர் தயாரிக்கும் நிறுவனங்கள் மற்றும் ஒரு ஒயின் தயாரிக்கும் நிறுவனம் இயங்கி வருகின்றன.
* மதுபான இறக்குமதிக்கான சிறப்பு கட்டண தொகையில் 3 விழுக்காடு சேவை கட்டணமாக டாஸ்மாக் நிறுவனத்தால் வசூலிக்கப்படுகிறது.
* 2021-22ஆம் ஆண்டில் அயல்நாட்டு மதுபானங்களை இறக்குமதி செய்வதன் மூலம் சிறப்பு கட்டணமாக அரசிற்கு உற்பத்தி ரூ.33.83 கோடியும் சேவை கட்டணமாக தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்திற்கு ரூ.3.58 லட்சமும் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.
* 2021-22-ம் ஆண்டில் ஆயவில்லைகளின் விற்பனை மூலம் அரசு ஈட்டியுள்ள நிகர வருவாய் ரூ.18.58 கோடி ஆகும்.
* முன்னாள் மதுவிலக்கு குற்றவாளிகளின் சமூக மற்றும் பொருளாதார மறுவாழ்விற்காக அரசு ரூ.5 கோடி மானியமாக வழங்கி வருகிறது.
* 2021-22 ஆம் ஆண்டில் 872 மதுவிலக்கு குற்றவாளிகளின் மறுவாழ்விற்காக ரூபாய் 2.61 கோடி அளிக்கப்பட்டுள்ளது.
* மது அருந்துதல் மற்றும் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதால் ஏற்படக்கூடிய தீமைகள் குறித்த விழிப்புணர்வை மாவட்டங்களில் மேற்கொள்ள தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.4 கோடி கடந்த 2021-22 ஆம் நிதி ஆண்டில் வழங்கப்பட்டுள்ளது.
* 2021-ம் ஆண்டில் திடீர் வாகன தணிக்கையின் மூலம் ஒரு லட்சத்து 81ஆயிரத்து 254 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 37 லாரிகள் ஒரு பேருந்து 6ஜீப்கள், 188 வேன்கள், 575 கார்கள், 127 ஆட்டோக்கள் மற்றும் 4751 இருசக்கர வாகனங்கள் உள்பட மொத்தம் ஆயிரத்து 685 ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
* 2020ஆம் ஆண்டில் 7 லட்சத்து 76 ஆயிரத்து 464 லிட்டர் கள்ளச்சாராயம் கைப்பற்றப்பட்டு அளிக்கப்பட்டுள்ளது. ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 516 லிட்டர் எரிசாராயம், பிற மாநிலங்களில் இருந்து கடத்தி வரப்பட்ட 25,74,434 மதுபான பாட்டில்கள் கைப்பற்றப்பட்டன. மதுவிலக்கு குற்றங்களில் பயன்படுத்தபட்ட 5685 மோட்டார் வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
* 2021ஆம் ஆண்டில் 20, 452.4 கிலோ எடையுள்ள கஞ்சா கைப்பற்றப்பட்டது. இது தொடர்பாக 6 ஆயிரத்து 853 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 19 வெளிநாட்டினர் உட்பட மொத்தம் 9571 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
* மதுபான சில்லறை விற்பனை கடைகளில் 31-3-2022 அன்றுள்ளவாறு, 6715 கடை மேற்பார்வையாளர்களும், 15,000 விற்பனையாளர்களும் மற்றும் 3090 உதவி விற்பனையாளர்களும் ஒப்பந்த தொகுப்பூதிய அடிப்படையில் பணிபுரிந்து வருகின்றனர்.
* 2021- 22 ஆம் ஆண்டில் மது விற்பனை வரியில் ரூ.36013.14 கோடி வருமானம் ஈட்டப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஸ்டெர்லைட் ஆலைக்கெதிரான ஆவணப்படம்; இயக்குநருக்கு சம்மன் அனுப்பிய காவல் துறை!