சென்னை:கடந்த நவ.15ஆம் தேதி உடல் நலக்குறைவு ஏற்பட்டு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி, இன்று (டிச.7) காலை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இவ்வாறு டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி, ஓமந்தூரார் மருத்துவமனையில் இருந்து புழல் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
முன்னதாக, சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி, புழல் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். அவ்வாறு அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரை கைது செய்தபோது, அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது.
இதனையடுத்து, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. பின்னர், அவர் மருத்துவக் கண்காணிப்பில் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில், அவருக்கு சிறு சிறு உடல் உபாதைகள் ஏற்பட்டதால், அடிக்கடி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சோதனைகள் மேற்கொண்டு வந்தனர்.