சென்னை: பி.ஜி.ஆர் தனியார் நிறுவனத்துக்கு தமிழ்நாடு மின்சார வாரியம் பல்வேறு சலுகைகளை வழங்கியுள்ளதாகவும், இது தொடர்பான ஆதாரங்களை விரைவில் வெளியிடுவதாகவும் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியிருந்தார்.
செந்தில் பாலாஜி - அண்ணாமலை மோதல்
இதனையடுத்து மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கும், அண்ணாமலைக்கும் இடையே இணையத்தில் கடும் வாதம் தொடர்ந்து வருகிறது. நேற்று முன் தினம் இருவரும் தங்களது ட்விட்ட்ர் பக்கங்களின் வாயிலாக தொடர்ந்து இதுகுறித்த விளக்கங்களை முன்வைத்து விவாதித்து வந்தனர்.
இந்நிலையில், சென்னை, அண்ணா சாலையில் உள்ள மின்சார வாரியத் தலைமை அலுவலகத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்தார். அண்ணாமலை அடுத்த 24 மணி நேரத்துக்குள் செய்தியாளர்களை சந்தித்து அவரது குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கை
முன்னதாக மின் வாரிய அலுவலகத்தில் உள்ள நுகர்வோர் குறைதீர்ப்பு மையமான மின்னகத்தில் ஆய்வு செய்த அமைச்சர், அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ”மின்னகம், மின்நுகர்வோர் சேவை மையம் தொடங்கப்பட்டு மின்துறை சார்ந்த பொதுமக்களின் புகார்கள் பெறப்பட்டு விரைந்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இதுவரை 4,14,152 புகார்கள் பெறப்பட்டு, அதில் 4,06,846 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. 98 விழுக்காடு புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு தீர்வு காணப்பட்டுள்ளது. இதுவரை 25,292 மின் கம்பங்கள் மாற்றப்பட்டுள்ளன. 700 பில்லர் பாக்ஸ் மாற்றப்பட்டுள்ளது.
அதேபோல் 7,000 சாய்ந்த மின் கம்பங்கள் சரி செய்யப்பட்டுள்ளன. 3,337 புதிய மின்மாற்றிகள் அமைக்கப்பட்டுள்ளன. கன்னியாகுமரியில் மழையினால் 101 மின்மாற்றிகளில் 14 மின்மாற்றிகள் சேதமடைந்துள்ளன. அவற்றை சரிசெய்ய மதுரையிலிருந்து மின் மாற்றிகள் கொண்டு வரப்பட்டு மாற்றப்பட்டுள்ளன.