சென்னை:சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த ஜூன் 14-ம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்தனர். இந்நிலையில், தனது கணவரை அமலாக்கத்துறை அதிகாரிகள் சட்ட விரோதமாக கைது செய்துள்ளதாகவும், அவரை உடனடியாக விடுவிக்கக்கோரியும் செந்தில் பாலாஜியின் மனைவி எஸ்.மேகலா, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு விசாரணை நீதிபதிகள் ஜெ.நிஷா பானு, டி.பரதச் சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் நடைபெற்றது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை தள்ளிவைத்திருந்தனர். இந்நிலையில், இந்த வழக்கில் நீதிபதி ஜெ.நிஷா பானு சென்னை உயர் நீதிமன்றத்தில் இருந்து நேரடியாகவும், நீதிபதி டி.பரத சக்ரவர்த்தி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் இருந்து காணொலி வாயிலாகவும் கடந்த ஜூன் 4ஆம் தேதி மாறுபட்ட தீர்ப்பைப் பிறப்பித்தனர்.
முதலில் தனது தீர்ப்பை வாசித்த நீதிபதி ஜெ.நிஷா பானு, ‘‘அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தது சட்டவிரோதம் என்பதால், ஆட்கொணர்வு மனுவை விசாரணைக்கு ஏற்கிறேன். எனவே, செந்தில் பாலாஜியை உடனடியாக விடுவிக்க வேண்டும்" என்றார்.
ஆனால் நீதிபதி டி.பரத சக்ரவர்த்தி தனது தீர்ப்பில், "அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்தது சட்டவிரோதம் கிடையாது. எனவே, இந்த ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்தது அல்ல என்பதால் தள்ளுபடி செய்கிறேன்.
அதேநேரம், அமைச்சர் செந்தில் பாலாஜி மருத்துவர்களின் ஆலோசனைப்படி, இன்று முதல் 10 நாட்களுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சையைத் தொடரலாம். அதன்பிறகு அவருக்கு சிறையில் உள்ள மருத்துவமனையில்தான் சிகிச்சை அளிக்க வேண்டும். அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற காலகட்டத்தை, நீதிமன்றக் காவலாக கருதக்கூடாது என்ற அமலாக்கத் துறையின் கோரிக்கையை ஏற்கிறேன்.
அவர் உடல் நலம் தேறிய பிறகு, அவரைக் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத் துறை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யலாம். அதை அமர்வு நீதிமன்றம் பரிசீலித்து, தக்க உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.
நீதிபதிகளின் மாறுபட்ட தீர்ப்பு குறித்து விவாதிப்பதற்காக இந்த வழக்கை மூன்றாவது நீதிபதி விசாரணைக்கு உத்தரவிடக்கோரி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கங்கபூர்வாலாவுக்கு இரு நீதிபதிகளும் பரிந்துரை செய்தனர்.
இதையடுத்து நீதிபதிகளின் பரிந்துரையை ஏற்ற தலைமை நீதிபதி, செந்தில் பாலாஜி மனைவி தொடர்ந்த ஆட்கொணர்வு மனுவை மூன்றாவது நீதிபதியாக சி.வி. கார்த்திகேயன் விசாரிப்பார் என அறிவித்தார். இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி, அமர்வு நீதிமன்றத்தின் மாறுபட்ட தீர்ப்பு குறித்து விவாதிப்பதற்காக வழக்கு விசாரணை நாளை (ஜூலை 07) தொடங்கும் எனவும், விடுமுறை நாட்களில் விசாரணை நடத்த தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்துள்ளார்.
இதையும் படிங்க :மின்சார வாரியத்தில் 397 கோடி ரூபாய் ஊழல் - அமைச்சர் செந்தில் பாலாஜி மீது அறப்போர் இயக்கம் புகார்!