தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மின் இணைப்புடன் ஆதார் எண் இணைக்க மேலும் 15 நாள் அவகாசம்! - aadhar card tneb connection link

தமிழ்நாட்டில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை சேர்க்க பிப்ரவரி 15-ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்படுவதாக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

கோப்புப்படம்
கோப்புப்படம்

By

Published : Jan 31, 2023, 1:54 PM IST

சென்னை:தமிழ்நாட்டில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணைச் சேர்க்கப் பிப்ரவரி 15-ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்படுவதாக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு முழுவதும் சுமார் 2 கோடியே 60 லட்சம் வீட்டு மின் இணைப்புகள் பயன்பாட்டில் உள்ளன. இது தவிர 22 லட்சம் விவசாய மின் இணைப்புகளும், 11 லட்சம் குடிசை மின் இணைப்புகளும் உள்ளன. இதில் வீட்டு மின் இணைப்புகளுக்கு 100 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது. இது தவிர விவசாயிகளுக்கும் நெசவாளர்களுக்கும் இலவச மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டில் மானியம் பெறக்கூடிய மின் நுகர்வோர் அனைவரும் தங்களது மின் இணைப்பு என்னுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இந்த அறிவிப்பு மின்சார வாரியம் தரப்பில் வெளியிடப்பட்டது. அதன்படி கடந்த ஆண்டு நவம்பர் 15ஆம் தேதி முதல் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி தொடங்கியது. ஆதார் எண்ணை இணைப்பதற்காக மின்வாரிய அலுவலகங்களில் சிறப்பு முகாம்களும் அமைக்கப்பட்டது.

டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் அனைத்து மின் நுகர்வோர்களும் தங்கள் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு இருந்தது. எனினும் இந்த காலக்கெடுவிற்கும் ஏராளமானவர்கள் மின் இணைப்பு எண்ணை இணைக்காததால் இதற்கான கால அவகாசம் ஜனவரி 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இதையடுத்து அனைவரும் தங்களது ஆதார் எண்ணை மின் இணைப்புடன் இணைத்து வருகின்றனர்.

இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, "நேற்று மாலை வரை 2.34 கோடி மின் இணைப்புகள் ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளது. இது மொத்தமுள்ள 2.67 கோடி வீடு, குடிசை, கைத்தறி, விசைத்தறி மற்றும் விவசாய இணைப்புகளில் 87.44 விழுக்காடு ஆகும்.மின் இணைப்புடன் ஆதாரை இணைக்காதவர்கள் விரைந்து இணைத்திட வேண்டும் என கேட்டுக்கொண்ட அமைச்சர் செந்தில் பாலாஜி தமிழ்நாட்டில் இதுவரை 87.44 சதவீதம் பேர் மின் இணைப்புடன் ஆதாரை இணைத்துள்ளனர். மின் இணைப்புடன் ஆதாரை இணைக்காதவர்களுக்காகப் பிப்ரவரி 15-ம் தேதி வரை கூடுதல் அவகாசம் வழங்கப்படுகிறது" எனத் தெரிவித்தார்.

ஆதாருடன் மின் இணைப்பை சேர்க்க இந்த லிங்கை பயன்படுத்தலாம் - https://adhar.tnebltd.org/Aadhaar/

ABOUT THE AUTHOR

...view details