தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

டாஸ்மாக் மூலம் மட்டுமே அரசு நிர்வாகம் நடைபெறுகிறதா? - அமைச்சர் செந்தில் பாலாஜி பதில்

டாஸ்மாக் மூலம் மட்டுமே அரசு நிர்வாகம் நடைபெறுவதுபோல தவறாக சித்திகரிக்கப்பட்டு வருகிறது என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.

டாஸ்மாக் மூலம் மட்டுமே அரசு நிர்வாகம் நடைபெறுகிறதா? - அமைச்சர் செந்தில் பாலாஜி பதில்!
டாஸ்மாக் மூலம் மட்டுமே அரசு நிர்வாகம் நடைபெறுகிறதா? - அமைச்சர் செந்தில் பாலாஜி பதில்!

By

Published : Mar 24, 2023, 9:41 PM IST

சென்னை:சென்னை தலைமைச் செயலத்தில் இன்று (மார்ச் 24) நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண் நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதில் பேசிய கோவை தெற்கு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், “கோவையில் மெட்ரோ ரயில் திட்டத்தை முறையாக செயல்படுத்த வேண்டும். செம்மொழிப் பூங்கா விரைவில் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்ற முயற்சிகள் எடுக்க வேண்டும்” என கோரிக்கை விடுத்தார்.

இதற்கு பதிலளித்துப் பேசிய நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், “கோவை விமான நிலைய விரிவாக்கப் பணிகளுக்கான நில எடுப்புப் பணிகள் 85 சதவீதம் நிறைவடைந்து விட்டது. சர்வதேச விமான நிலையம் குறித்து மத்திய அரசுதான் முடிவெடுக்க வேண்டும். வானதி சீனிவாசன் சார்ந்த கட்சிதான் மத்தியில் ஆட்சியில் இருக்கிறது. கோவையுடன் சேர்த்து ஏற்கனவே நிலுவையில் உள்ள மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்றுவது குறித்தும், மத்திய அரசிடம் வலியுறுத்த வேண்டும்” எனக் கூறினார்.

இதனையடுத்து பேசிய வானதி சீனிவாசன், “மதுரை, கோவை மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்கும் தேவையானத் திட்டங்களைப் பெற்றுத் தர தயாராக இருக்கிறோம்” என பேசினார். அப்போது குறுக்கிட்ட சபாநாயகர் அப்பாவு, “மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைபோல வேகமான பணிகள் நடைபெற வேண்டும்” என்றார். இதனால் அவையில் சிரிப்பலை எழுந்தது.

இதனைத் தொடர்ந்து பேசிய வானதி சீனிவாசன், “மகளிர் உரிமைத் தொகையைப் பார்க்கும்போது, டாஸ்மாக் சரக்கு வாங்குவோரை ஆதார் எண்ணைப் பதிவு செய்து விட்டு, யார் அதிகம் குடிக்கிறாரோ, அவர்களின் குடும்பத்தினருக்குத்தான் ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும்” என கூறினார். அப்போது பேசிய சபாநாயகர், “இதுவும் குஜராத் மாடலோ?” என்றார். இதற்குப் பதிலளித்த வானதி சீனிவாசன், "குஜராத்தில் மதுக் கடைகளே இல்லை" என கூறினார்.

பின்னர் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, “மதுக்கடைகள் இல்லாததால்தான் குஜராத்தில் கள்ளச்சாரயம் குடித்து 20 பேர் உயிரிழந்தனர். தமிழ்நாட்டில் மட்டும்தான் மதுக் கடைகள் இருப்பது போல உறுப்பினர் (வானதி சீனிவாசன்) பேசுகிறார். கரோனா காலத்தில் தமிழ்நாட்டில் மதுக் கடைகள் மூடப்பட்டன. ஆனால் கர்நாடகத்தில் மதுக் கடைகள் திறக்கப்பட்டு கூடுதல் விலைக்கு விற்கப்பட்டது. தமிழ்நாட்டில் மதுபானக் கடைகள் என்றால், தவறான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகிறது.

டாஸ்மாக் மூலமாக மட்டுமே அரசு நிர்வாகம் நடைபெறுவதுபோல தவறாக சித்திகரிக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆட்சியில் 10,000 கோடி ரூபாய் வருவாய் டாஸ்மாக் மூலமாக அதிகரித்துள்ளது. குடிப்பவர்கள் அதிகரித்துள்ளதால் வருமானம் அதிகரிக்கவில்லை. மதுபானத்தின் விலை உயர்த்தப்பட்டதால், வருமானம் உயர்ந்துள்ளது. மதுபானக் கடைகளின் வருமானத்தைப் பொறுத்தவரை, நாம் பின்னால்தான் உள்ளோம்.

உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட பாஜக ஆளும் மாநிலங்களில் முதல் வருமானமே மதுக் கடைகள் மூலமாகத்தான் வந்து கொண்டிருக்கின்றன. பாஜக ஆளும் கட்சியாக இருக்கக் கூடிய மாநிலங்களைக் கருத்தில் கொண்டு உறுப்பினர் பேச வேண்டும்" என்றார். இதனையடுத்து “கோவையில் சாலைகள் மோசமாக உள்ளது” என வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பினார்.

இதற்குப் பதிலளித்துப் பேசியஅமைச்சர் செந்தில் பாலாஜி, “கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட சாலைகள் மிக மோசமாக உள்ளதை கருத்தில் கொண்டு, 200 கோடி ரூபாய் சிறப்பு நிதியை முதலமைச்சர் வழங்கினார். முதல் கட்டமாக 90 கோடி ரூபாய் நிதி விடுவிக்கப்பட்டு, டெண்டர் முடிக்கப்பட்டு, பெரும்பான்மையான பணிகள் நிறைவு பெற்றுள்ளது.

மீதம் உள்ள பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. எனவே கடந்த காலங்களில் செப்பனிடாத புதுப்பிக்காத சாலைகள் அனைத்தும், திமுக ஆட்சியில் படிப்படியாக எடுத்துக் கொள்ளப்பட்ட இருக்கின்றது. 111 கிலோ மீட்டர் மண் சாலைகளையும், தார் சாலைகளாக மாற்றுவதற்கான நிதி வழங்கப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.

இதையும் படிங்க:"சட்டப்பேரவையில் ஓபிஎஸ் பேசியதில் எந்த தவறும் இல்லை" - சசிகலா!

ABOUT THE AUTHOR

...view details