சென்னை:கரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த பிப்ரவரி மாதம் முதல் மூடப்பட்ட பள்ளிகள், பல்வேறு கட்ட ஊரடங்கு தளர்வுகளுக்குப் பிறகு வரும் 16ஆம் தேதி திறக்க தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இதையடுத்து, மாணவர்கள் பாதுகாப்பிற்கு வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பள்ளிகளில் மேற்கொள்ளப்பட்டனவா என்பது குறித்து பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தலைமைச் செயலகத்தில் உயர் அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
அப்பொழுது, தமிழ்நாட்டில் வரும் 16ஆம் தேதி ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கப்படும் எனத் தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து பள்ளிகளைத் திறப்பு, மாணவர்களுக்குத் தேவையான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது, குறைக்கப்பட்ட பாடத் திட்டங்களை எவ்வாறு மாணவர்களுக்கு அறிவிக்கலாம் என்பது உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன.
அதனடிப்படையில் விரைவில் பள்ளிகளை திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.