சென்னை:தமிழ்நாட்டில் பள்ளிகளை எப்போது திறக்கலாம்? பொதுத்தேர்வுகளைத் தள்ளி வைக்கலாமா? என்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தலைமைச் செயலகத்தில் துறை அலுவலர்களுடன் இன்று ஆலோசனை நடத்தினார்.
தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பு குறையாத நிலையில், பள்ளி எப்போது திறக்கப்படும் எனத் தெரியாத சூழல் நிலவுகிறது. இந்த மாதத்தில் பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை என்பது உறுதியான நிலையில், அடுத்த மாதம் பத்தாம் வகுப்புமுதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மட்டும் வகுப்புகளைத் தொடங்கலாமா, பொதுத்தேர்வுகளை ஒத்திவைக்கலாமா? உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து துறைச் செயலர், இயக்குநர்களுடன் அமைச்சர் ஆலோசனை நடத்தினார்.
மேலும், இன்று மதியம் புதிய கல்விக் கொள்கை தொடர்பாக அமைக்கப்பட்ட வல்லுநர் குழுவின் முதல் கூட்டமும் நடைபெறுகிறது. இதில், பெற்றோர்கள், மாணவர்கள், கல்வியாளர்களிடம் கருத்து கேட்பது குறித்து திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக புதிய கல்விக் கொள்கையின் சாதக பாதக அம்சங்கள் குறித்து அலுவலர்களுடன் அமைச்சர் ஆலோசனை நடத்தியுள்ளார்.