சென்னை:தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று (ஏப் 8) கூட்டுறவுத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதில் பேசிய அதிமுக உறுப்பினர் செல்லூர் ராஜூ, பொங்கல் பரிசு முழுமையாக சென்று சேரவில்லை என்று கூறினார். இவரைத் தொடர்ந்து பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, பொங்கல் பரிசு வழங்குவதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாகவும், பல்வேறு இடங்களில் வழங்கப்பட்ட பொங்கல் பரிசுப்பொருட்கள் தரமாக இல்லை என்றும் கூறினார்.
இதற்குப் பதிலளித்த உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, பொங்கல் பரிசு வழங்கியதில் எந்த முறைகேடும் இல்லை எனவும், பொங்கல் பரிசு பெற்ற மக்கள் பாராட்டுத் தெரிவித்ததாகவும் கூறினார். மேலும் அதிமுகவின் தகவல் தொழில்நுட்ப அணி மூலமாக தவறான கருத்துகள் புறப்படுவதாகவும் கூறினார்.
தொடர்ந்து பேசிய செல்லூர் ராஜூ, கூட்டுறவு சங்க தலைவர்களின் பதவிக்காலத்தை ஐந்தாண்டிலிருந்து மூன்றாண்டுகளாக குறைப்பது தொடர்பான முடிவு குறித்து கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்து பேசிய அமைச்சர் பெரியசாமி, கூட்டுறவு சங்க உரிமைகளை மத்திய அரசு பறிக்கப் பார்க்கிறது எனவும், எக்காரணத்தைக் கொண்டும் உரிமைகளை விட்டுத் தரமாட்டோம் என்றும் கூறினார்.