சென்னை:ஓட்டேரி கொசப்பேட்டை எட்வர்ட் பார்க்கைச் சேர்ந்தவர் சதீஷ் குமார் (29). அமைச்சர் சேகர்பாபுவின் மருமகனான சதீஷ் மீது கொலை மிரட்டல், ஆபாசமாகப் பேசுதல், பாலியல் வன்புணர்வு உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட வழக்குகள் காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ளது.
அதேபோல கடந்த 2016ஆம் ஆண்டு சதீஷ், அதே பகுதியைச் சேர்ந்த 23 வயதான பெண் ஒருவரைத் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி பாலியல் வன்புணர்வு செய்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் சதீஷ் மீது நம்பிக்கை மோசடி, பாலியல் வன்புணர்வு உள்பட 7 பிரிவுகளின் கீழ் புளியந்தோப்பு அனைத்து காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, கடந்த 2018ஆம் ஆண்டு சதீஷை கைது செய்தனர்.
பின்னர், 2018ஆம் ஆண்டு நவம்பரில் ஜாமீனில் வெளியே வந்த சதீஷ், முறையாக நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்துள்ளார். இதனால் வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்த சதீஷிற்கு பிடிவாரண்ட் பிறப்பித்து அல்லிக்குளம் நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது.
இந்த நிலையில், பூந்தமல்லி அருகே தலைமறைவாக இருந்து வந்த சதீஷை புளியந்தோப்பு அனைத்து மகளிர் காவல் துறையினர் கைது செய்தனர். இதனையடுத்து கைது செய்யப்பட்ட சதீஷ், அல்லிக்குளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த சதீஷ் குமாரின் மனைவியும், அமைச்சர் சேகர்பாபுவின் மகளுமான ஜெயகல்யாணி, “கடந்த 2016ஆம் ஆண்டு முதல் எனது கணவர் சதீஷ் குமாரை காதலித்து வந்தேன்.
எங்களது காதல் விஷயம் தெரிந்த பின்பு, வீட்டை விட்டுச் சென்றேன். அப்போது எனது கணவர் மீது சிறு சிறு வழக்குகள் மட்டுமே இருந்தது. அதன் பிறகு எனது தந்தையான அமைச்சர் சேகர்பாபு தூண்டுதலின் பேரில், புளியந்தோப்பு காவல் நிலையத்தில் அதிகப்படியான பொய் வழக்கு எனது கணவர் மீது போடப்பட்டது.
நாங்கள் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்ட பிறகு, தொடர்ச்சியாக அமைச்சர் சேகர்பாபுவின் தூண்டுதலின் பேரில் எங்களைக் காவல் துறையினர் பின் தொடர்ந்து தொல்லை கொடுத்து வருகின்றனர். இது மட்டுமின்றி 2018ஆம் ஆண்டு எனது கணவர் மீது ஒரு பெண் கொடுத்த மோசடி வழக்கை பாலியல் வன்புணர்வு வழக்காக மாற்றி பொய்யாகப் போட்டுள்ளனர்.