சென்னை:கோயம்பேட்டில் தடுப்பூசி சிறப்பு முகாமை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு இன்று (செப்.26) பார்வையிட்டு பொதுமக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டியதின் அவசியம் குறித்து துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் சேகர் பாபு, " சென்னையில் இன்றைய தினம் 1600 இடங்களில் தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. 2 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் கையிருப்பில் இருக்கின்றன.
சென்னையைப் பொறுத்தவரையில் சுமார் 50 லட்சம் பேர் 18 வயதைக் கடந்தவர்கள் தடுப்பூசி போடக்கூடிய நிலையில் உள்ளார்கள். இதில் 40 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 14 லட்சம் பேர் இரண்டு தவணை தடுப்பூசியையும் செலுத்திக் கொண்டார்கள்.
கோயம்பேட்டில் 85% தடுப்பூசி
இரண்டு தவணை தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்களுக்கு கரோனா பாதித்தாலும் உயிரிழப்பு ஏற்படாத வகையில் நோய் எதிர்ப்பு ஆற்றல் உருவாகும். எனவே மக்கள் விரைவாக இரண்டு தவணை தடுப்பூசியையும் செலுத்திக் கொள்ள வேண்டும்.
சென்னை கோயம்பேடு சந்தையில் பணிபுரிபவர்கள் 85 விழுக்காடு நபர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மீதமுள்ளவர்களுக்கும் தடுப்பூசி செலுத்துவதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
ஆக்கிரமிப்பு நிலம்
குயின்ஸ் லேண்ட் அமைந்துள்ள இடம் தற்போது வருவாய் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இடம் தொடர்பாக நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளோம். தொடர்ந்து சட்டப் போராட்டம் நடத்தி நிச்சயம் அந்த இடத்தை மீட்க தேவையான நடவடிக்கைகளில் இந்து சமய அறநிலையத்துறை ஈடுபடும்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: 'திமுக மக்களை ஏமாற்றுகிறது' - எஸ்.பி.வேலுமணி குற்றச்சாட்டு