சென்னை: வளசரவாக்கம் அகஸ்தீஸ்வரர் மற்றும் வேள்வீஸ்வரர் கோயிலுக்கு அதன் அருகிலேயே 186 சென்ட் பரப்பளவில் குளம் அமைந்துள்ளது. இத்திருக்குளமானது சென்னை பெருநகர மாநகராட்சியின் மூலம் புனரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த திருக்குளப் பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் கூறும்போது, அகத்தீஸ்வரர் மற்றும் வேல்வீஸ்வரர் கோயிலின் திருக்குளம் சம்பந்தமான வரப்பெற்ற புகாரைத் தொடர்ந்து கடந்த ஜூலை மாதம் இத்திருக்கோயிலுக்கு நேரடியாக வருகை தந்து ஆய்வு செய்தோம். தற்போது இந்த திருக்குளத்தின் பணிகளுக்காக ஒதுக்கப்பட்டிருந்த நிதி ரூ.1.50 கோடியிலிருந்து ரூ. 1.70 கோடியாக உயர்த்தப்பட்டு, குளத்தின் நீர்த்தேக்க அளவு குறையாமல், குளத்தின் மொத்த பரப்பளவையும் பயன்படுத்துகின்ற வகையிலும், அதனைச் சுற்றி நடைபாதை, பூத்துக் குலுங்கும் தெய்வத்திற்கு உகந்த பூக்கள் தரும் செடிகளையும் அமைத்து சிறப்பான எழில் நயத்தோடு உருவாக்க வேண்டும் என்று திட்டமிட்டு செய்து கொண்டிருக்கிறோம்.
சென்னை மாநகராட்சி மூலமாகவே இந்த குளத்தை அமைப்பதற்கு உண்டான பணிகளை மேற்கொள்ள திட்டமிட்டு இருக்கின்றோம். அகத்தீஸ்வரர் மற்றும் வேள்வீஸ்வரர் திருக்கோயிலுக்கு கடந்த 2010 ஆம் ஆண்டு திருப்பணிகள் முடிவுற்று கும்பாபிஷேகம் நடைபெற்று இருக்கின்றது. ஆகம விதிப்படி 12 ஆண்டுகள் பூர்த்தியாகும் நிலையில் இந்த திருக்கோயிலில் திருப்பணிகளை மேற்கொள்வதற்கு ஏதுவாக முதற்கட்டமாக மண்டல குழு, மாநில குழுவினுடைய ஒப்புதல் பெறப்பட்டிருக்கின்றது.
சன்னிதானத்தை சுற்றி வருகின்ற பகுதி குறுகலாக இருக்கின்ற இடங்களில் அகலப்படுத்துவதற்கு வல்லுநர்களின் ஆலோசனை பெற்று சன்னிதானத்தை விரிவுபடுத்தப்படும். மேலும், திருக்குளத்தை சுற்றி கோபுரம் அமைத்தல், குளத்திற்கு தேவையான வசதிகளை ஏற்படுத்துகின்ற வகையில் மூலவர் சன்னதிக்கு முன்புறமுள்ள பாழடைந்த கற்காறை மண்டபத்தை நீக்கி, கருங்கல் மண்டபமாக மாற்றி அமைத்தல், சுற்றுச்சுவரை உயர்த்தி கட்டுதல் போன்ற பணிகளுக்கு திட்ட மதிப்பீடு செய்யப்பட்டு தயாராக உள்ளது.